October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

அந்த கால அம்மன்கொடை / கடையம் பாலன்

1 min read

Ammankodai of that period / Kadayam Balan

4.2.2021

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்.. அப்போது எனக்குப் பத்து அல்லது பன்னிரண்டு வயது இருக்கும்.. பள்ளிக் காலமது..இப்போதும் என் மனதில் அகலாமல் ?.. ஒளி வீசிக்கொண்டிருக்கும் பசுமையான நினைவுகள்… நிலையான கல்வெட்டுகளாய்..

கடையம்

எங்கள் ஊர் கடையம். இயற்கை அன்னை கொலுவிருக்கும் வளம் நிறைந்த ஊர். விண்ணும் மண்ணும் ஒத்துழைத்து.. முப்போகம் விளையும் ஊர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருந்தது. இப்போது தென்காசி மாவட்டத்திற்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது.


அது ஒரு தை மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை…அதிகாலை வேளை. கோரைப்பாயில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை நாதசுரமும், மேளமும் சேர்ந்து இசைத்து தூக்கத்தைக் கலைக்க, பூபாளமமாய் முயன்று தோற்றுப்போயின. தொடர்ந்து “விநாயகனே வினை தீர்ப்பவனே…” என்று சீர்காழியும், “உள்ளம் உருகுதய்யா” என்று டி.எம்.எஸ். &ம் தத்தம கணீர் குரல்களால் தட்டி எழுப்புகின்றனர். படக் என்று எழுந்து பாயில் அமர்ந்த என் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ஆம். பத்ரகாளி அம்மன் கொடை தொடங்கி விட்டது என்னும் செய்தியைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது.
எட்டு நாட்கள் ஒரே கொண்டாட்டம்தான் இரவும் பகலும் கோவிலிலே.. சாமி கும்பிட வருகிற கூட்டத்தைப் பார்க்க கரகாட்டத்தை ரசித்தேன் சப்பரம் தூக்கும் இனிய காட்சி திகட்டாமல் கண்டு காண வாழ்த்துக்கள் சாரி கேட்க வான வேடிக்கை பார்க்க சாமியாட்டம் பார்க்க புரியாவிட்டாலும் பூசை புனஸ்காரங்களை கலந்து கொள்ள ஆஹா வருஷத்துக்கு ஒருமுறை வந்து போகும் வசந்த விழா அம்மன் மனம் மட்டுமா குளிர்கிறது…

கால்நாட்டு

ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த கொஞ்சம் இக்காலத்திற்கு வருகிறேன்.. ஏனெனில்.. இப்போது… கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கோவிலில் கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு ஊர்களில் கொடியேற்றம் போல் எங்கள் ஊரில் கால்நாட்டு. காரணம் எங்கள் கோவிலில் கொடி மரம் கிடையாது. கொடைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நல்ல நேரத்தில் மாலை நேரத்தில் கால் நாட்டப்படும். பல விசயங்களில் பழமை மறைந்து புதுமை திறந்து விட்டதே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. ஆனால் இந்த ஒரு விசயத்தில் மட்டும் நல்லவேளை பழமை பாழாய்ப்போனது என்ற நிம்மதி இப்போதும் எனக்கு உண்டு.
அக்காலத்தில் கால்நாட்டு நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் நடந்ததாக நினைவில் இல்லை. கால் நாட்டு அன்று ஊர்க்கூட்டம் நடைபெறும். அதில் சண்டை, சச்சரவு காரசாரமாக நடக்கும். பிரச்சனைகள் முடிந்து இரவு 11 அல்லது 12 மணிக்குத்தான் கால்நாட்டப்படும். அதிலும் சில ஆண்டுகளில் குறிப்பிட்ட நாளில் கால் நட்டாமல் கொடையே மறுவாரத்திற்குச் சென்றதாகவும் அப்போது பெரியவர்கள் கூறியதைக் கேள்விபட்டு இருக்கிறேன். நாட்டப்பட்ட காலைப் பிடுங்கிய சம்பவமும், யாரும் எதிர்பாராமல் சிலர் கால்நாட்டிய சம்பவமும் அக்காலத்தில் தவிர்க்க முடியாமல்.. நிகழ்ந்ததாகவும் சொல்கின்றனர்…
இப்போது அப்படியெல்லாம் இல்லை எந்த இடர்ப்பாடு வந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கால்நாட்டுகிறார்கள். மேலும் கால்நாட்டும் முன்பு முப்புடாதி அம்மன்கோவிலில் இருந்து வந்து பத்திரகாளி அம்மனுக்கு பூஜை செய்கிறார்கள். இதுவெல்லாம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடலுக்குள் பிரிவேது கடவுளில் பேதம் எது என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது இந்த நிகழ்வு.

பந்தல் அலங்காரம்

மீண்டும் அப்போதைய நிகழ்வுக்கு வருகிறேன்… கோவில் அருகே உள்ள ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. பள்ளியில் இருந்து பார்க்கும்போது பத்ரகாளியம்மன் கோவில்கொடைக்குப் பந்தல்போடுவது தெரியும் மனதிற்குள் இன்ப வெள்ளம் பாயும்.. இப்போது கோவில் முன்பு நிலையான பெரியமண்டபம் கட்டப்பட்டு விட்டது. அப்போது பந்தலைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். நடுப்பக்கத்தில் கூம்பாகவும் இருபுறமும் தட்டுப்பந்தலாகவும் இருக்கும். பந்தலுக்குள் வண்ண வண்ண துணிகள் அலங்கரிக்கும். அப்போது கலையரங்கம் கிடையாது. சிறிய மண்மேடை தான் உண்டு. கொடை தொடங்குவதற்கு முன் மழையில் கரைந்து போன மணமேடையின் ஓரங்களைச் செம்மண்ணியில் பூசி சரிபடுத்துவார்கள். அந்த மேடையில் சிறிய அளவிலான பந்தல்.
கோவில் முன்பும் கலைநிகழ்ச்சி நடக்கும் மைதானத்திலும் புழுதி மண் பரவி இருக்கும். அதை மறைக்க ஆற்று மணல் போடுவார்கள். ஆற்று மணலைக் கழுதைகள் மீது ஏற்றிக் கொண்டு வரும் காட்சி இன்னும் மனதில் இருக்கிறது. அரை கிலோ மீட்டார் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து சலவைத் தொழிலாளிகள் கழுதைகளில் மணலை அள்ளி கொண்டு வந்து பரப்புவார்கள்.
திருவிழா தொடங்கியபோது கூம்பு வடிவ ஒலிபெருக்கி என்னை எழுப்பியது அல்லவா? நான் எழுந்து பல்கூட துலக்காமல் கோவிலுக்குச் சென்று பார்ப்பேன். அங்கே பந்தலை வாழை மரங்களும், பாக்கு மரங்களும், கூந்தல்பனை தோகைகள், குரோடோன்ஸ் செடி கிளைகள் ஆகியவை கோவிலின் அழகை மேலும் அழகுப்படுத்தி இருக்கும்.

பள்ளிக்கூடம்

வீடுவந்து பல்தேய்த்து, குளித்துவிட்டு பழைய சோறு சாப்பிட்டு பள்ளிக்கூடம் செல்ல தயாராகிக் கொண்டு இருப்பேன். (அப்போதெல்லாம் கடைசி திருவிழாவான செவ்வாய்க்கிழமை அன்றுதான் தோசை அல்லது இட்லி இருக்கும் பலகாரங்கள்) கோவிலில் அடிக்கும் நையாண்டி மேளம் மைக் இல்லாமல் வீட்டுக்குள் வந்து முழங்கும். ஓடிச் சென்று பார்த்துவிட்டு பள்ளிக்கூடம் செல்வேன்.
அப்போதெல்லாம் எட்டாம் திருவிழாவின்போதும் மறுநாளும்தான் (செவ்வாய், புதன்) பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடுவார்கள். (உயர்நிலைப்பள்ளியில் அந்த விடுமுறையும் கிடையாது.) கோவிலில் இருந்து வரும் ஒலிப்பெருக்கி பாடல்கள் பள்ளியில் பாடம் படிக்க விடாமல் தடுக்கும். மாணவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கொடையைப்பற்றி பேசிக்கொண்டே இருப்போம். சர்பத் வாங்கி குடிக்க அல்வா வாங்கி திங்க ராட்டினம் ஏறி ஆட….அவ்வப்போது டீச்சர் நான் இங்கே இருக்கிறேன் என்பதை காட்ட “டேய்… பேசாதீங்க” என்று குரல் எழுப்புவார்.

சிலேட்டில் சப்பரம்

கோவிலில் இரவு அலங்கரிக்கப்படும் சம்பரத்தை நாங்கள் சிலேட்டிற்கு கொண்டு வந்துவிடுவோம். சிலேட்டில் எழுதும் குச்சியால் அழகாக சம்பரம் வரைந்து டும் டும் என்று வாயால் மெதுவாக மேளம் தட்டி வகுப்பறைக்குள் டீச்சருக்கு தெரியாமல் அமைதியாக விளையாடுவோம். சில மாணவர்கள் வண்ண சாக்பீசால் சப்பரத்தை அழகாக வரைந்து இருப்பார்கள். சில நேரங்களில் அது போட்டி கூட நட சில சமயம் டீச்சர் சிலேட்டில் எதாவது பாடத்தை எழுதச் சொல்லிவிடுவார்கள்.
இதற்கிடையே பகல் சுமார் 11 மணி அளவில் பால்குடம் ஊர்வலம் வரும். வகுப்பில் இருந்தபடி பால்குடங்களை எட்டிஎட்டிப் பார்ப்போம். பத்திரகாளி அம்மன்கோவிலை பொறுத்தவரை ஒன்றாம் திருவிழா அன்று பால்குடம் எடுப்பார்கள். வடக்கே உடையார் பிள்ளையார் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வருவார்கள். அங்கிருந்து ஊருக்குள் இருக்கும் கோவிலை அடைந்த பின்னர் ஊருக்கு வெளியே வடபத்து குளம் அருகே உள்ள மூலஸ்தான கோவிலை சென்றடையும். அங்கே பக்தர்கள் சுமந்து சென்ற பாலால் அபிஷேம் நடக்கும். பின்னர் பூஜையை முடித்துவிட்டு ஊருக்கு வருவார்கள். இதையெல்லாம் அப்போது பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் விடுமுறை விட மாட்டார்கள்.
மாணவர்களின் வியாபாரம்

மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் கோவிலுக்குச் சென்று விளையாட்டுதான். கோவிலைச் சுற்றி மைதானத்தில் மேல் வகுப்பில் படிக்கும் அன்பர்கள் சர்பத் வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். ஒரு ஸ்டூலைப்போட்டு அதன்மேலே கண்ணாடி பாட்டிலில் சர்பத்தை ஊற்றி விற்பனைக்கு வைத்திருப்பார்கள். சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு கலரில் சர்ப்பத் பார்க்க அழகாக இருக்கும். சர்பத் என்றால் தண்ணீரில் சாக்ரீன் பொடியையும், கேசரிப் படவுரையும் சேர்த்து கரைத்து வைத்திருப்பார்கள். பன்னீர் பாட்டிலில் உள்ள சர்பத் என்றால் ஒரு பைசா. குளிர்பான(கலர்) பாட்டிலில் என்றால் இரண்டு பைசா என்று விற்பார்கள். சிலர் அல்வா போட்டு விற்பார்கள். அல்வா என்றால் கோதுமை அல்வா அல்ல. நாம் இப்போது கேசரி என்கிறோமே அதைத்தான் தட்டில் ஊற்றி கேக்காக வெட்டி பூவரசு இலையில் வைத்து தருவார்கள். ஒரு துண்டு அல்வா (கேசரி) ஐந்து பைசா என்று நினைக்கிறேன். ஒரேயரு அண்ணன் மட்டும் சர்பத், அல்வாவோடு சவ்மிட்டாய் செய்து விற்பார். பெரியவர்கள் மட்டும் செல்லும் டீ, முறுக்கு கடையைவிட சிறுவர்களை இந்த கடைகள்தான் ஈர்க்கும

வியாபாரிகள் மண்டகபடி

ஒன்றாம் திருவிழா ஊருக்குள் அவ்வளவு களையாக இருக்காது. காரணம் கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோவிலின் மூலஸ்தான கோவில் ஊருக்கு வெளியே வடபத்து குளம் அருகே இருக்கிறது. அங்கிருந்துதான் முதல்நாள் சப்பரம் தயாராகி வரும். அப்போதெல்லாம் உற்சவர் பத்திரகாளி அம்மன் சிலை மூலஸ்தான கோவிலில்தான் இருக்கும். (உற்சவர் சிலை களவுபோய் மீண்டும் கிடைத்தபின் உற்சவர் சிலை ஊருக்குள் இருக்கும் கோவிலில் வைக்கப்பட்டது.) இரவு பத்து மணிக்கு மேல் பக்தர்கள் அங்கு சென்று அபிஷேகம் பூஜைகள் நடக்கும். பின்னர் அம்மனுக்கும், கோவில் பூசாரி, அம்மன்கொண்டாடி (சாமி ஆடுபவர்கள்) ஆகியோருக்கும் காப்பு கட்டுவார்கள். அதன்பின் அலங்கரிக்கபபட்ட சப்பரத்தில் உற்சவர் அம்மனை வைத்து ஊருக்கு கொண்டு வருவார்கள்.
ஒரு காலத்தில் அதாவது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஒண்ணாம் திருவிழா கீழக்கடையத்தைச் சேர்ந்த எலுமிச்சம்பழ வியாபாரிகள் மண்டகபடியாக நடந்தது. அந்த வியாபாரம் படுத்தபின் அவர்களால் அந்தத் திருவிழாவை நடத்த முடியாமல் போனது. அதன்பின் ஒண்ணாம் திருவிழா பொதுத் திருவிழாக கொண்டாடப்பட்டது.
சுமார் இரண்டு மணிக்கு சப்பரம் ஊருக்குள் வந்து வீதி உலா வந்து சுமார் 4 அல்லது 5 மணிக்கு கோவிலை வந்து அடையும். எங்கள் தாத்தா காலத்தில் எல்லா சப்பரங்களையும் பக்தர்கள் தோளில்தான் சுமந்து வருவார்கள். ஆனால் நான் சிறுவனாக இருந்தபோது பெரும்பாலும் சகடை வண்டியில் சப்பரத்தை வைத்து கொண்டு வருவார்கள். அப்போது பத்திரகாளி அம்மன் கோவிலுக்கும், முப்புடாதி அம்மன் கோவிலுக்கும் சகடை வண்டி கிடையாது. எனவே சிவன் கோவிலில் இருக்கும் இரண்ட சகடை வண்டிகளை பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு ஒன்றும் முப்புடாதி அம்மன்கோவிலுக்கும் கொண்டு வருவார்கள்.
பத்திரகாளிஅம்மன் வீதி உலா வந்து கோவிலை வந்து அடைந்ததும் அம்மனுக்கு திருஷ்டி சுத்தி ( சிறிய குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் தேங்காய், மாவிலை வைத்து சப்பரத்தை மூன்று முறைவலம் வந்து தண்ணீரை சப்பரத்தின் முன் ஊற்றுவார்கள்.) சப்பரத்தை கீழே இறக்குவார்கள்.

மாலைகளுக்குப் போட்டி

அந்த நேரத்தில் பெரிய பையன்களாக இருக்கும் சிறுவர்கள் சப்பரத்தில் தொங்க விட்டிருக்கும் மாலையை அறுத்துக் கொண்டு ஓடுவது அன்றாடம் நடக்கும். அந்த மாலையை வீட்டுக்கு கொண்டு வருவதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
சப்பரத்தில் இருந்து உற்சவரை எடுத்து ஊருக்குள் இருக்கும் கோவிலில் வைப்பார்கள். கொடை முடியும் வரை உற்சவர் ஊருக்குள் இருக்கும் கோவிலில்தான் இருக்கும்.
ஒன்றாம் திருவிழா சப்பரம் பெரும்பாலும் ரிஷப வாகனத்தில் இருக்கும். எப்போதாவது பூஞ்சப்பரமாக வரும்.
(திருவிழாவின் மகிழ்ச்சி சம்பவங்கள் இன்னும் வரும்…)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.