கண்ணாயிரத்தை குழப்பிய கொம்புத் தேன்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min read
Honey of the horn that confused the Kannayiram/ comic story / Tabasukumar
26.9.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்த பின்னர் வயிறு பசிக்கிறது என்று சொன்ன நேரத்தில் கடையம் முத்தமிழ் கலா மன்றம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தயிர்சாதம் லெமன் சாதம் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. கண்ணாயிரம் ஒவ்வொன்றிலும் ஒரு பொட்டலம் வாங்கி கொண்டு சாப்பிடத்தொடங்கினார்.
லெமன் சாதம் சாப்பிட்டபின் தயிர்சாதம் சாப்பிட்ட அவர் அதில் எலுமிச்சம் பழ ஊறுகாய் இருப்பதை பார்த்த அவர் மனைவி பூங்கொடியிடம் தயிர்சாதத்துக்கு என்ன ஊறுகாய் இருக்கிறது என்று கேட்க அவர் மாங்காய் ஊறுகாய் இருக்கிறது என்று கூறினார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் தன் மனைவியைப் பார்த்து..பூங்கொடி..மாங்காய் காயா இருக்கும்போது ஊறுகாய் போட்டாங்க..அதனால மாங்காய் ஊறுகாய் என்று சொன்னாங்க…சரி..எலுமிச்சம் பழம் ஆன பிறகுதானே ஊறுகாய் போட்டாங்க.. அதை எலுமிச்சை ஊறு பழம் என்றுதானே சொல்லவேண்டும்..அதை விடுத்து எலுமிச்சை ஊறுகாய் என்று ஏன் சொல்கிறார்கள் என்று கேட்டார்.
பூங்கொடியோ..என்னங்க..எல்லோரும் சொல்லுறாங்க..நானும் சொல்லுறேன். எனக்கு வேற ஒண்ணும் தெரியாது என்றார்.
கண்ணாயிரம்..ம் விடுவதாக இல்லை.எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் என்று அடம்பிடித்தார்.
பூங்கொடியோ பதில் சொல்லமுடியாமல் திணறினார்.
வேகமாக பாய்ந்து சென்ற பயில்வானை கண்ணாயிரம் மடக்கி சொல்லிட்டுப்போங்க என்க.. பயில்வானோ..என்னப்பா உன் பிரச்சினை…சீக்கிரம் சொல்லு..என்றார்.
கண்ணாயிரம் மெல்ல..எலுமிச்சம் பழத்திலேதானே ஊறுகாய் போடுறோம்..பிறகு ஏன் எலுமிச்சை ஊறு பழம் என்று சொல்லாமல் எலுமிச்சை ஊறுகாய் என்று ஏன் சொல்லுறோம் என்று கேட்டார்.
பயில்வான் மெல்ல..அதுவா..நல்ல கேள்வி…ஏன் காய்னு சொல்லுறாங்க தெரியுமா…ஊறுகாய் செய்யணுமுன்னா..எலுமிச்சை..மாங்காய் இதை சட்டியில் வெட்டிப்போட்டு அப்புறம் மிளகாய் பொடி தூவி உப்பு போட்டு ஊறவைப்பாங்க..பின்ன காயவைப்பாங்க.. அதனால அதை காயின்னு சொல்லுறாங்கப்பா..என்று தனக்கு தெரிந்ததை சொன்னார்.
கண்ணாயிரம் உடனே..அப்படின்னா..நெல்லை அவிச்சி காயவைக்காங்க.. அதை நெல்லைகாய் அப்படின்னு சொல்லுறது இல்லையே..என்று மடக்கினார்.
அதைக்கேட்ட பயில்வான்..ஏம்பா..ஊறுகாய் ஊறவைக்குமுன்ன உப்பை போட்டு சூடுபண்ணி கரண்டியால் பதனீர் காய்ச்சிற மாதிரி காய்ச்சுவாங்க..அதனால காயின்னு சொல்லியிருப்பாங்க..என்க.. கண்ணாயிரமோ விடாக்கொண்டானாக..அப்படின்னா…காய்ச்சிய பதனீரை கருப்பட்டி என்றுதானே சொல்லுறோம்..கருப்பட்டி காயின்னு சொல்லுறது இல்லையே என்க..பயில்வானுக்கு தலை சுற்றியது.
கண்ணாயிரம் உன் சந்தேகத்தை போக்கணுமுன்னா…சுடிதார் சுதாதான் வரணும்..நான் சுதாவை வரச்சொல்லுறேன் என்றவாறு பயில்வான் அங்கிருந்து நகர்ந்தார்.
சிறிது நேரத்தில் சுடிதார் சுதா அங்கு வந்தார். என்ன கண்ணாயிரம்..எலுமிச்சம் பழத்தைத்தான் வெட்டி உறுகாய் வைக்கிறோம். பிறகு ஏன் எலுமிச்ச ஊறுகாய் என்று ஏன் அழைக்கிறோம் என்று கேட்கிறீங்க..அப்படித்தான.. எலுமிச்சை காயாக இருக்கும் போது புளிக்கும். பழமான பிறகும் புளிக்கத்தான் செய்யும். அதனால்தான் எலுமிச்சம் பழத்தை வெட்டி ஊறுகாய் போட்டாலும் எலுமிச்சம் பழ ஊறுகாய் என்கிறார்கள் என்று சுடிதார் சுதா சொன்னார்.
அதைக்கேட்டதும்..கண்ணாயிரம் தன் சிந்தனையை சுழலவிட்டார். அப்படின்னா மீன் ஊறுகாய்..பூண்டு ஊறுகாய் எல்லாம் இருக்கே..அது எல்லாம் புளிக்கவா செய்து என்று கண்ணாயிரம் கேட்க.. சுடிதார்சுதா விழித்தார்.அது வந்து..நான் வரட்டுமா என்று கிளம்பினார்.
கண்ணாயிரமோ என் சந்தேகத்தை தீர்க்கிற பதில் கிடைக்கலையே..என்று புலம்ப..பூங்கொடியோ..அய்யோ.. இவருக்கு நல்ல புத்தி வரட்டுமேன்னு எலுமிச்சம் பழம் தேய்த்து அருவியிலே குளிக்கவச்சேனே…இன்னும் சரியாகலையே..நான் என்ன செய்வேன் என்று கண்களை கசக்க கண்ணாயிரம் கோபம் அடைந்தார்.
என்ன பூங்கொடி..அழுவுற..அருவியிலே குளிச்சபிறகு எனக்கு புத்தி நல்லா வேலை செய்யுது. புதுசு புதுசா..சிந்தனை வருது. யாரும் பதில் சொல்லமுடியாம திணறுறாங்க பாரு. அதைப் பார்த்து நீ பெருமைபட வேண்டும்.சும்மா அழாதே என்று அதட்டினார்.
சரி என்று பூங்கொடி தலையை அசைக்க…கண்ணாயிரம் மெதுவாக திரும்ப..ஒருவர் தேன்..தேன் என்று குரல் கொடுத்தபடி வந்தார். அவர் தேன் நிரம்பிய பாட்டிலை கையில் தொங்க விட்டிருந்தார்.கண்ணாயிரம் அவரை நிறுத்தி..என்ன தேன் என்று கேட்க அவர் மலைத்தேன் என்றார்.
கண்ணாயிரம் உடனே..மலைத்தேனா.. மலையிலிருந்து அருவிதான் வரும்.தேன் எப்படி வரும்..என்று கலாய்த்தார்.
உடனே அவர் இது மலையிலே தேனீ கட்டிய கூட்டிலிருந்து வந்த தேன்…அதனால மலைத்தேன் என்று சொல்வாங்க..என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்..அட..உழைக்கிறது தேனீ..பெயரு மலைக்கா என்று வியப்பாக கேட்டார்.
தேன் விற்க வந்தவர் கண்ணாயிரத்திடம்..நீங்க நல்லா பேசுறீங்க…உங்களுக்கு கொம்பு தேன் தெரியுமா என்று கேட்டார்.
கண்ணாயிரம்..அது என்ன கொம்பு தேனா..தெரியாதே என்றார்.
இந்த மலைத் தேன் ஒரு பாட்டில் வாங்குங்க..கொம்பு தேனுன்னா என்னவென்று சொல்லுறேன் என்றார்.
கண்ணாயிரம் ஆவலுடன்..தேனுக்கு கொம்பெல்லாம் இருக்குமா என்று கேட்க..அவரோ.. நீங்க மலைத்தேனை வாங்குங்க நான் கொம்புத் தேன் பற்றி சொல்கிறேன் என்று சொன்னார்.
கண்ணாயிரம் பூங்கொடியிடம் ..காசு கொடு மலைத்தேன் வாங்கணுமுன்னு கேட்க..பூங்கொடியோ.. ஏங்க..தேன் எல்லாம் வேண்டாம்.. அது போலியா இருக்கும்..என்று சொல்ல கண்ணாயிரம் எனக்கு தேனு வேணும் என்று அடம்பிடிக்க..பூங்கொடி அவரது தலையில் ஓங்கி குட்டினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை