March 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பிடிக்காத செருப்பு கேட்ட கண்ணாயிரம்/ நகைச்சுபை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram in the shoe shop/ A funny story / Tabasukumar

5.10.2024
கண்ணாயிரம் ஓட்டலில் சாப்பிட சென்றார். ஓட்டல் ஊழியரிடம் இட்லி, தோசை இருக்கா என்று கேட்க, அவர் தோசை, இட்லி இருக்கு என்று சொல்ல.. கண்ணாயிரம் கோபம் அடைந்து அடுத்த ஓட்டலுக்குப் போனார்.
அங்கு நான் வெஜிட்டேரியன் என்று போர்டு போட்டிருப்பது புரியாமல் அங்கு போய் இட்லி, தோசை கேட்டு குழப்பி அங்கு அது கிடைக்காததால் அங்கிருந்து வெளியே வந்தனர்.
ரோட்டோர கடையில் இட்லி சுடுவதைப் பார்த்து அங்கு போய் இட்லி வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார். நாளைக்கு சாப்பாடு வேண்டுமே என்று நினைத்தவர் விறகு அடுப்பில் சமைத்துவிடலாம் என்று நினைத்தார். பானைகள் விற்கும் கடைக்குச் சென்று அடுப்பு, பானை வாங்கினார். பின்னர் கடைக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். வழியில் பார்த்தவர்கள், என்ன கண்ணாயிரம் கியாஸ் ஸ்டவ் வந்த காலத்திலே விறகு அடுப்பை தூக்கிக்கிட்டுப் போற என்று கிண்டல் செய்தனர்.
கண்ணாயிரம் அவர்களைப் பார்த்து விவரம் தெரியாதவர்கள் என்று சிரித்துக்கொண்டே வீட்டுக்குவந்தார்.
அப்பாட.. ஒரு ஓட்டலில் சாப்பிடனுமுன்னா எவ்வளவு கஷ்டமா இருக்கு.. நாளைக்கு நம்மளே வீட்டிலே சோறு பொங்கி சாப்பிட வேண்டியதுதான் என்று நினைத்தவர் தூக்கம் கண்களை கட்டியதால் அப்படியே படுத்து தூங்கினார்.
காலையில் 8 மணிக்குத்தான் எழுந்தார். ச்சே..அலுப்பில தூங்கிட்டேன்..சீக்கிரம் பஸ்நிறுத்தத்துக்குப் போகணுமே என்றவாறு பாத்ரூமுக்குள் நுழைந்தவர் குளித்துவிட்டு வெளியே வந்தார்.
வயிறு பசித்தது. இனி சோறு பொங்கினா நேரமாகிவிடும் என்று நினைத்தவர் வேகமாக வேட்டி, சட்டை போட்டார். முகத்தில் கிரீம் தடவி பவுடர் போட்டார். செண்டு அடித்தபடி வெளியே வந்தவர் புதிதாக வாங்கிய லேடீஸ் செருப்பை காலுக்குள் திணித்தார். முக்கால் கால்தான் உள்ளே நுழைந்தது. கால் அளவு கால் வெளியே தெரிந்தது. இருந்தாலும் பரவாயில்லை. லேடீசுக்கு பிடித்த செருப்பு என்றவாறு ரோட்டில் வேகமாக நடந்தார்.
கால் வலித்தது. அதை அவர் பொருட்படுத்தாமல் கால் வலிக்க வலிக்க இழுத்து இழுத்து நடந்தார்.
பார்த்தவர்கள் எல்லோரும் என்ன கண்ணாயிரம் இப்படி நடக்கிறாரு.. லேடீஸ் செருப்பை எங்கிருந்து சுட்டார் என்று கேலி செய்தனர்.
கண்ணாயிரம் அதை சட்டைசெய்யவில்லை.
பஸ் நிறுத்தத்துக்குப் போகணும்..பஸ்சில் ஏறும் பெண்களைப் பார்க்க வேண்டும் என்று மட்டும் நினைத்தார். ஒருவழியாக கஷ்டப்பட்டு பஸ்நிறுத்தத்தை அடைந்தார்.
கால்வலித்தாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு பஸ்சுக்கு காத்திருந்த பெண்களைப் பார்த்தார்.
என்ன ஒண்ணுரெண்டு புள்ளங்கத்தான் சுடிதார் போட்டிருக்கும். மத்ததுக தாவணிதான் போட்டிருக்கும். இப்போ எல்லா புள்ளங்களும் சுடிதார் போட்டிருக்கு.. ஸ்டையிலே மாறிப்போச்சே..
அவர்களை பார்த்து சிரித்தார். அவர் லேடீஸ் செருப்பு போட்டிருப்பதைப் பார்த்து பெண்கள் கல,கல என்று சிரித்தனர். ஆனால் கண்ணாயிரமோ தன்முக அழகைப் பார்த்துதான் அவர்கள் சிரிப்பதாக நினைத்துக்கொண்டு ரொம்ப ஸ்டைலாக நடந்தார்.
அதைப் பார்த்து அவர்கள் அதிகமாக சிரிக்க, கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. முகத்திலே போட்ட கிரீம் நல்லா வேலைசெய்து என்று நினைத்துக்கொண்டார்.
பஸ் வந்ததும் பெண்கள் தாவி ஏறினார்கள். கண்ணாயிரம்.. இந்த பஸ் தாமதமாக வந்திருக்கலாம்.. கூடக்கொஞ்ச நேரம் பெண்களைப் பார்த்திருக்கலாம்..இன்னைக்குப் பார்த்து சரியான நேரத்துக்கு வந்து பெண்களை ஏற்றிச் சென்றுவிட்டது என்று கோபப்பட்டார்.
அப்போது பஸ்சிலிருந்து வயசான ஒரு பெண் தன் மகனைப் பார்த்து கையசைத்தார். அதை அறியாத கண்ணாயிரம் இளம்பெண் யாரோ கையசைப்பதாக நினைத்து இவரும்.. வேகமாக நடுரோட்டில் நின்று கையை வேகமாக அசைக்க அந்த வழியாக வேகமாக வந்த லாரி டிரைவர் சடன் பிரேக் போட்டு நிறுத்தினார்.
யோவ் சாவு கிராக்கி..நடு ரோட்டில் நின்று ஆடுற..போய்யா அங்கே என்று திட்ட கண்ணாயிரம் வேகமாக ரோட்டைவிட்டு ஒதுங்க நினைத்தபோது தள்ளாடி கீழே விழுந்தார்.
அதில் செருப்பு அவரது காலை பலமாக அறுத்துவிட்டது. அம்மாடி..நல்ல செருப்புன்னு கடைக்காரர் தந்தாரு.. இப்படி கடிக்குதே கடைக்காரரிடம் கேட்டுவிடவேண்டியதுதான்.. என்று காலை இழுத்து இழுத்து செருப்புக்கடைக்குச் சென்றார்.
அங்கிருந்த ஊழியரைப் பார்த்து ஏம்பா..நல்ல செருப்பா கேட்டா..இப்படி கடிக்கிற செருப்பா கொடுத்திட்டியே என்று சத்தம் போட்டார். அதற்கு கடை ஊழியர்.. நீங்க என்ன கேட்டீங்க..பெண்களுக்கு பிடிக்கிற மாதிரி செருப்பு கேட்டீங்க..கொடுத்தோம்.
இந்த செருப்பு பெண்களுக்குப் பிடிக்குதா என்று கேட்க,ஆமா பிடிக்குது. குறை சொல்லவில்லை என்றார்.
பின்ன என்ன பிரச்சினை என்று கடை ஊழியர் கேட்க, எனக்கு இந்த செருப்பு பிடிக்குதே என்க, அப்படியா ரொம்ப மகிழ்ச்சி..என்று கடை ஊழியர் சொன்னார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் கோபமாகி..ஏங்க செருப்பு பிடிக்குது என்று சொன்னால் சந்தோஷப்படுறீங்க..என்று கத்தினார்.
கடை ஊழியர்கள் புரியாமல் விழித்தனர். கண்ணாயிரம் செருப்புகாலை காட்டி..யோவ் செருப்பு பிடிக்குதய்யா..கால் புண்ணாயிட்டுது என்றார்.
அதற்கு கடை ஊழியர் ..ம் காலை செருப்பு கடிச்சிட்டுன்னு சொல்லுய்யா..பிடிக்குது பிடிக்குதுன்னு சொன்னா எப்படி என்று கண்ணாயிரத்தை பிடி பிடின்னு பிடித்தார்.
அதற்கு கண்ணாயிரம்..ம்.செருப்பு கடிச்சிட்டுன்னு சொன்னா செருப்புக்கு பல் எங்கே இருக்குன்னு கேட்பீங்க..என்றார்.
கடை ஊழியர்கள் திகைத்தனர்.
பின்னர் கண்ணாயிரம்,எனக்கு பிடிக்காத செருப்பு தாங்க என்றார்.
கடை ஊழியர்கள் மயக்கம் வராத குறையாக..பிடிக்காத செருப்பு எங்க கடையிலே இல்லை என்றனர்.
கண்ணாயிரம் அடுத்த கடையைத் தேடிச் சென்றார். (தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.