தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த 4 காட்டு யானைகள் அட்டகாசம்
1 min read
4 wild elephants enter village near Tenkasi, causing panic
16.5.2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியில் நான்கு காட்டு யானைகள் ஊர் பகுதிக்குள் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனைத் தடுத்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய வனத்துறையினர் அலட்சியம் காட்டுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல், தென்னை, மாமரம், போன்ற மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து நெல், தென்னை, மாமரம் போன்றவற்றை அழித்து நாசம் செய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறது. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடிதண்ணீரைத் தேடி ஊர் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. அப்படி வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இதனால் ஏராளமான நெல் வயல்களும் தென்னை மரங்களும் மா மரங்களும் அழித்து நாசம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காட்டு யானைகள் ஊர் பகுதியில் உள்ள நீர் நிலைகளை தேடி வருவதால் பொதுமக்கள் மேலும் அச்சம் அடைந்துள்ளனர். ஏற்கனவே செங்கோட்டை பகுதிகளில் பண்பொழி, வடகரை, சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் பொதுமக்கள் சிலரை தாக்கி அவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது கற்குடி பகுதியில் நான்கு காட்டு யானைகள் ஊர் பகுதிக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசப்படுத்துவதோடு பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இது பற்றி கற்குடி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கேட்டபோது
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் குடிதண்ணீர் இல்லாமல் வனப்பகுதியில் இருந்து நீர்நிலைகளை தேடி ஊர் பகுதிக்குள் வருகிறது. அதன்படி செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக நான்கு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பொதுமக்கள் வசித்து வரும் ஊருக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள நெல் பயிர்களை மிதித்து நாசம் செய்வதோடு தென்னை மரங்கள் மற்றும் மாமரங்களை பிடுங்கி வீசி நாசம் செய்து வருகிறது.
இது பற்றி மாவட்ட நிர்வாகம், மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் வனத்துறையினரிடம் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும்படி கோரிக்கை விடுத்த போது அவர்கள் வனவிலங்குகளை விரட்ட எங்களிடம் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. குறிப்பாக பட்டாசுகள் வெடித்து விரட்டுவதற்கு எங்கள் கைவசம் பட்டாசுகள் கூட கிடையாது மேலும் வனத்துறையில் தேவையான அளவுக்கு ஊழியர்களும் இல்லை, எனவே பொதுமக்கள் உங்கள் செலவில் பட்டாசுகளை வாங்குவதோடு எங்களுக்கு துணையாக பொதுமக்களும் வந்தால் நாங்கள் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்கிறோம் என்று கூறுகிறார்கள்.
கற்குடி பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளால் அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களும் விவசாயிகளும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனைகள் தலையிட்டு வன விலங்குகளிடம் இருந்து பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தங்களது சொந்த நிலங்களுக்கு சென்று வருகிற விவசாயிகளை கூட வனவிலங்குகளின் பாதுகாப்பு என்ற பெயரில் மிரட்டுகிற வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளால் பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் காட்டு யானைகள் அழித்த நெல் பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் மா மரங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.