கோவிந்தப்பேரியில் விவசாயிகள் வனத்துறை அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம்
1 min read
Farmers, forest officials hold consultation meeting in Govindaperi
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கடையம் வனச்சரகம் சார்பில் விவசாயிகள், வனத்துறை அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி .கே. பாண்டியன் தலைமை தாங்கினார். கோவிந்தப்பேரி கிராம நிர்வாக அலுவலர் பழனிச்செல்வி முன்னிலை வகித்தார். வனத்துறை அதிகாரி து.கர்ணா மூர்த்தி சிறப்புரை ஆற்றினார். வனத்துறை அதிகாரி வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு எந்த விதமான நஷ்டமும் வராமல் வனத்தறை பாதுகாக்கும் என்றும், வனத்துறை விவசாயிகளுக்கு பக்க பலமாக இருக்கும். வனவிலங்குகளால் ஏற்படும் தொல்லைகளை நீக்க வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவிந்தப் பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.பாண்டியன் பேசும் போது கூறியதாவது:-
கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி கிராமம் மலயடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து உள்ளார்கள்.
இந்த விவசாயிகளுக்கு வனவிலங்குகளால் அடிக்கடி பெரும் சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக காட்டுப்பன்றிகள், மான்கள், மிளா போன்ற விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதப்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வனவிலங்குகள் குறிப்பாக காட்டுப்பன்றிகள் வனப்பகுதியில் இருந்து இறங்கி விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துகின்ற பன்றிகளை விவசாயிகள் அப்புறப்படுத்தும் போது அவர்கள் மீது வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது,
தமிழக அரசு வனப்பகுதிலிருந்து மூன்று கிலோமீட்டருக்கு கீழே வரும் காட்டுப்பன்றிகளை மட்டும்தான் சுட வேண்டும் என்ற அரசு விதிமுறையை மாற்ற வேண்டும். குறிப்பாக அதில் மூன்று கிலோ மீட்டர் என்ற விதிமுறையை தளர்த்த வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்துகின்ற காட்டுப்பன்றிகள், மான்கள், மிளா போன்ற வனவிலங்குகளால் சேதங்கள் ஏற்படும் பொழுது ஒரு லட்சம் சேதம் ஏற்பட்டால் நஷ்டஈடாக ரூபாய் 500, 1000 மட்டுமே தமிழக அரசு வழங்குகிறது. இது மிகவும் குறைவானது. ஆகவே அந்தத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்.50,000 சேதம் ஏற்பட்டால் 25,000 ரூபாயாவது கொடுக்க வேண்டும். விவசாயிகள் அந்த பயிர்களுக்கு செலவழித்த செலவுத் தொகையை மட்டுமாவது கொடுக்க வேண்டும் என்றும் அதுவும் விரைவாக கொடுக்க வேண்டும் என்றும் பேசினார் .
இந்தக் கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் வனவர், காடு பார்ப்பவர், உதவியாளர் மற்றும் விவசாயிகள் சார்பில் கல்யாணி சுந்தரம், குகன் பாண்டியன், சுடலை, சுப்பிரமணியன்,சிவா, மாரித்துரை, மீனாராஜா, செந்தில்குமார், சண்முகையா தங்கச்சாமி மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தப் பேரி ஊராட்சி செயலர் பரமசிவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.