தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை பரிசோதனை
1 min read
Electronic Voting Machines in Tenkasi
11.12.2025
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்
தேர்தல் அலுவலர் ஏ.கே.கமல்கிஷோர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தேர்தல் அலுவலர் ஏ.கே.கமல்கிஷோர் பேசுகையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக் கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை பரிசோதனை பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் முதல்நிலை பரிசோதனை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்று முதல் முதல்நிலை பரிசோதனை பணிகள் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் 10 அல்லது 15 நாட்களுக்குள் முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் இருக்கும். தற்போது மின்னணு வாக்குப்பதிவு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU) 2848ம், கட்டுப்பாட்டு கருவிகள் (CU) 2466 ம் வாக்கு செலுத்தியதை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) 2551ம் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4 ஆம் தேதி ஆரம்பித்து இன்று வரை நடைபெற்றது. வரைவு வாக்காளர்பட்டியல் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி இப்பணிகளை மேற்கொண்டு உள்ளார்கள்.
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 89 சதவீதம் பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 சதவீத பணிகளும் டிசம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது நிறைவடைந்து 100 சதவீத பணிகளும் முடிவு பெறும் என தேர்தல் அலுவலர் ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.