June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக சட்டசபை தேர்தல் வரலாறு(1984)- 3-வதாக எம்ஜிஆர் ஆட்சி

1 min read

Tamil Nadu Assembly Election History (1984)- 3rd MGR rule

12.4.2026
1980-ல் தமிழகத்தில் அமைந்த கூட்டணி அடுத்து கொஞ்ச காலத்திலேயே மாறி விட்டது. முதல்-அமைச்சர் எம்ஜிஆர் எப்போதுமே மத்திய அரசை பகைத்துக் கொள்ள மாட்டார். எனவே இ.காங்கிரசுடன் உறவை புதுப்பித்துக் கொண்டார்.
அதனால் திமுக உறவை விட்டு இ.காங்கிரஸ் விலகிச் சென்று விட்டது.
இந்த நிலையில் அரசியல் சதுரங்க வேட்டைகள் ஆரம்பித்தன. திமுக 37, இ.காங்கிரஸ் 31 என்று இருந்த எண்ணிக்கையை மாற்றி, திமுகவின் பலத்தைக் குறைக்கும் வகையில் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் அதிமுக
ஈடுபட்டது. அதாவது இ. காங்கிரசின் 31-க்கும் கீழ் திமுகவின்
எண்ணிக்கையை கொண்டு வந்து விட்டால், திமுகவின் எதிர்க்கட்சி அந்தஸ்தையும், கருணாநிதியின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் பறித்து
இ.காங்கிரசிடம் கொடுத்து விடலாம் என்பது அதிமுகவின் திட்டம். அதற்கு ஏற்ற வகையில் திமுக எம்எல்ஏக்கள் அதிமுக பக்கம் இழுக்கப்பட்டனர்.
அப்போது கட்சித்தாவல் தடைச்சட்டம் இல்லாதது வசதியாகப்போய்விட்டது.
இந்த அரசியல் சூது கருணாநிதிக்கு நன்றாகப்புரிந்தது. உடனே, அவரும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் தத்தம் எம்எல்ஏ பதவிகளை (அண்ணாநகர், புரசைவாக்கம்) ராஜினாமா செய்தனர். இதனால் அரசியல் சூதாட்டமும்
தொடரமுடியாமல் நின்று போனது. அப்போது தமிழக சட்டமன்றத்தின் மேலவை செயல்பாட்டில் இருந்தது.

கருணாநிதி மேல்சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்சி ஆனார். அதோடு மேல்சபையில் எதிர்க்கட்சித்தலைவர் என்ற இடத்துக்கும் வந்தார்.

இவ்வாறு அதிமுக-திமுக அரசியல் படுசூடாகப் போய்க்
கொண்டிருந்த நேரம் பிரதமர் இந்திராகாந்தி தமிழக வருகையின் போது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச் சென்றார். எம்ஜிஆரும் உடன் சென்றார்.
அப்போது எம்ஜிஆருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு கோவில்
தூண்களைப்பிடித்துக்கொண்டு சமாளித்து, ஒருவழியாக கோவிலை விட்டு வெளியே வந்தார்.
தஞ்சை சுற்றுப்பயணம் முடிந்து, இந்திரா டெல்லி திரும்பினார். எம்ஜிஆர் சென்னை திரும்பினார். அடுத்த சில நாட்களிலேயே மிகப்பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து விட்டன.
எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
1984 அக்டோபர் 31-ந் தேதி டெல்லியில் இந்திராகாந்தி அவருடைய மெய்க்காவலர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனால் அவருடைய மகன் ராஜீவ்காந்தி தற்காலிக பிரதமராக பதவி ஏற்றார்.
இங்கே, எம்ஜிஆரின் சிறுநீரகங்கள் செயல் இழந்து உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரை மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு சென்றனர். நிதிஅமைச்சராக இருந்த நெடுஞ்செழியன், தற்காலிகமாக முதல்- அமைச்சர் பொறுப்பு ஏற்றார்.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த ராஜீவ்காந்தி முன்வந்தார். அதோடு, தமிழகத்திலும் ஓராண்டு காலம் இருக்கும் போதே சட்டமன்றத்தை கலைக்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்திராகாந்தி கொலையாலும், எம்ஜிஆர் நலிவுற்றதாலும் எழுந்த அனுதாப அலையைப் பயன்படுத்திக் கொள்ள அதிமுகவும், இ.காங்கிரசும் முடிவு செய்து அதற்கு
ஏற்ப காய்களை நகர்த்தின.
1984 டிசம்பர் இறுதியில் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதிமுகவும் இ.காங்கிரசும் கூட்டு சேர்ந்து ‘எம்ஜிஆர் பார்முலா’ என்ற அடிப்படையில் இடங்களை பகிர்ந்து கொண்டன.
அதாவது நாடாளுமன்றத்துக்கு காங்கிரசுக்கு 70 சதவீதம், அதிமுகவுக்கு 30 சதவீதம்; சட்டமன்றத்துக்கு அதிமுகவுக்கு 70 சதவீதம், காங்கிரசுக்கு 30 சதவீதம் என தொகுதிகளை பங்கிட்டு போட்டியிட்டன.

எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். அவர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சிகளும், இந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளும் தேர்தல் பிரசாரத்துக்க
பயன்படுத்தப்பட்டன. சினிமா தியேட்டர்களிலும் செய்தித்துறை சார்பில் இக்காட்சிகள் காட்டப்பட்டன.
அனுதாப அலை சூறாவளியாக வீசிய இத்தேர்தல்களின் முடிவை திமுக தலைவர் கருணாநிதி முன்கூட்டியே
யூகித்து விட்டார். எனினும் திமுகவின் வெற்றிக்காக சளைக்காமல் பிரசாரம் செய்தார்.
எம்எல்சியாக இருந்ததால் 1984 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத அவர், தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்தார். இந்திராவின் படுகொலையும், எம்ஜிஆரின் உடல்நலிவும் ஏற்படுத்தி இருந்த களநிலவரத்தை தெளிவாக உணர்ந்த அவர், “40 ஆண்டுகால நண்பரின்
(எம்ஜிஆர்) நலிவு நீங்கிட வாழ்த்துகள்; நாடு நலம் பெற உதயசூரியனுக்கு வாக்குகள்” என்ற வாசகங்களுடன் திமுகவின் சுவரொட்டிகளை வடிவமைத்தார்.
அவர் எதிர்பார்த்ததுபோலவே திமுகவின் இடங்கள் வெகுவாக சரிந்தன. அதிமுக-இ.காங்கிரஸ் கூட்டணி இமாலய வெற்றி பெற்றது. அதிமுக 133, இ.காங்கிரஸ் 61, கா.கா.தே.கா. 2.
திமுக 24, மார்க்சிஸ்ட் கம்யூ 5, ஜனதா 3, இந்திய கம்யூ 2.
ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் 32,484 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எம்ஜிஆர் 60,510
வல்லரசு 28,026
எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோதும், மறைந்தபிறகும் தற்காலிக முதல்-அமைச்சராகப் பதவி வகித்த நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு
29,573 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நெடுஞ்செழியன் 67,178
ராஜாம்பாள்(திமுக) 37,605.
3-வது முறையாக ஆட்சியைப்பிடித்த அதிமுகவின் தற்காலிக முதல்- அமைச்சராக நெடுஞ்செழியனே சிறிதுகாலம் பதவியில் இருந்தார்.
எம்ஜிஆர் சிகிச்சை முடிந்து 1985 பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு திரும்பினார். அதன் பின், பிப்ரவரி 10-ந் தேதி பொதுமக்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
எம்ஜிஆரின் 3-வது பதவிக்காலம் கடினமாகவே சென்றது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு அதிமுகவில் ஆர்எம் வீரப்பன், ஜெயலலிதா அணிகள் குடைச்சலாகவே இருந்தன.
இந்த நிலையில் 1987
டிசம்பர் 24-ந் தேதி அவர் மரணம் அடைந்தார்.
ஜானகி முதல்வர்
இதையடுத்து, நெடுஞ்செழியன் மீண்டும் தற்காலிக முதல்-அமைச்சர் ஆனார். ஆனால் சில நாட்களிலேயே எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்- அமைச்சர் பதவி ஏற்றார். அவரது தலைமையை ஜெயலலிதா அணியினர்
விரும்பவில்லை. இருதரப்பு எம்எல்ஏக்களும் பிரிந்து பலப்பரீட்சையில் ஈடுபட்டனர்.
1988 ஜனவரியில் கவர்னரின் உத்தரவுப்படி ஜானகி அம்மாள் மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டமன்றம் கூட்டப்பட்டது. இதில் பயங்கர கலவரம் ஏற்பட்டு எம்எல்ஏக்கள் மோதிக்கொண்டனர். மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டதாக சபாநாயகர் பிஎச் பாண்டியன் அறிவித்தாலும், கவர்னர் ஏற்கவில்லை.
சட்டமன்ற கலவரத்தை காரணம் காட்டி, ஜனவரி 30-ந் தேதி ஜானகி அம்மாள் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து விட்டது.
1977, 80, 84 என தொடர்ந்து 3 முறை எமஜிஆர் ஆட்சியைப்பிடித்து இருந்தாலும், ஒருமுறை கூட முழுமையாக 5 ஆண்டு பதவியில் நீடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1984 தேர்தல் கண்ணோட்டம்

பதிவான வாக்குகள் 2,16,86,473
அதிமுக 133 (80,30,809; 37%)
காங் 61 (35,29,708: 16.3%)

காகாதேகா 2

திமுக 24 (63,62,770; 29.3%)
சிபிஎம் 5
ஜனதா 3
சிபிஐ 2சுயே 4


ராஜீவ்காந்தியின் மகத்தான சாதனை

1984 தேர்தலில் வென்று பிரதமர் ஆன ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் வென்ற இடங்கள் 414. இந்த மகத்தான சாதனை எண்ணிக்கையை இன்று
வரை யாரும் தொடமுடியவில்லை.

(தமிழ்நாட்டில் காங் 25
அதிமுக 12

திமுக 2).

(1989 தேர்தல் நிலவரத்தை அடுத்து காண்போம்).

-(கட்டுரைத்தொகுப்பு மணிராஜ்).

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *