June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக சட்டசபை தேர்தல் வரலாறு (2011) 3-வது முறையாக ஜெயலலிதா

1 min read

Tamil Nadu Assembly Election History (2011) Jayalalithaa for the 3rd time

19.4.2026
2006க்கும், 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் குறுக்கிட்டது. இதில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து பாமக, மார்க்சிஸ்ட், இந்திய
கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தன.
திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த காங்கிரசுடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து கொண்டது. தேமுதிக தனித்து களம் கண்டது.
இலங்கை போர் தீவிரமாக நடைபெற்ற நிலையில் அதன் தாக்கம் தமிழகத்திலும் தேர்தல் பிரசாரத்தில் வெளிப்பட்டது. டைரக்டர் சீமான் தலைமையில் சினிமா கலைஞர்கள் சிலர் திரண்டு இலங்கை பிரச்சினையை மையப்படுத்தி, காங்கிரசுக்கு எதிராக பிரசாரத்தை தீவிரப்படுத்தினர். அப்படி இருந்தும் முந்திய (2004) தேர்தலைவிட அதிக இடங்களை மத்தியில் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
தமிழகத்திலும், புதுவையிலும் சேர்த்து, 40-ல் 28 தொகுதிகளை திமுக- காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. (திமுக 18, காங்கிரஸ் 9, விடுதலைச்சிறுத்தைகள் 1).
மீதி 12 இடங்கள் அதிமுக கூட்டணி வசம் சென்றன. (அதிமுக 9, மதிமுக 1,
மார்க்சிஸ்ட் 1, இந்திய கம்யூ 1).
திமுக அணி வாக்குகள் 1,29,29,043 (42.54 சதவீதம்)
அதிமுக அணி வாக்குகள் 1,13,26,035 (37.27சதவீதம்)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 15,764 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாமக 6 தொகுதிகளில் போட்டியிட்டு
ஆறிலும் தோல்வி அடைந்தது.

மு.க. அழகிரியின் தேர்தல் பிரவேசம் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி முதல்முறையாக
தேர்தல் களம் கண்டு, மதுரை தொகுதியில் போட்டியிட்டு 1,40,985 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய மந்திரியானார்.
தேமுதிக ஒரு தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை என்றாலும், 31 லட்சத்து 26 ஆயிரத்து 117 வாக்குகளைப்பெற்று (10.3 சதவீதம்) வலுவான சக்தியாக அடையாளம் காட்டிக்கொண்டது.
அடுத்த 2 ஆண்டுகளில் சட்டமன்றத்தேர்தல் வந்தபோது, தேமுதிகவை வசமாக அதிமுக கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டது. யாருடனும் கூட்டணியே கிடையாது என்று கூறி வந்த விஜயகாந்தை, அதிமுக பக்கம்அழைத்து வந்ததில் எழுத்தாளர் துக்ளக் சோ முக்கிய பங்காற்றினார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக் ஆகியவை இடம் பெற்றன. நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கமும் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தது.
அதிமுகவுடன் கருத்து வேறுபாட்டால் வெளியேறிய மதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டது.
ஆளுங்கட்சியாக இருந்த திமுகவுடன் பாமக மீண்டும் வந்து கூட்டணியில் சேர்ந்து கொண்டது. காங்கிரசும் கூட்டணியில் நீடித்தது. திமுக ஆட்சியில் இலவச வண்ணத்தொலைக்காட்சி, கலைஞர் வீடு கட்டும் திட்டம், கலைஞர் காப்பீட்டுத்திட்டம் போன்றவை மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தபோதும், 2ஜி ஊழல் புகார் ஊதிப்பெரிதுபடுத்தப்பட்டதில் கட்சியின் பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மத்தியில் ஆண்ட காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தபோதும், சிபிஐ ரெய்டுகளை ஏவி மிரட்டி தொகுதிப்பங்கீட்டில் 63 இடங்களை வலுக்கட்டாயமாகப்பெற்றுக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. பாமக அதன் பங்குக்கு 30 இடங்களை வாங்கி போட்டியிட்டது. திமுக போட்டியிட்ட இடங்களே 119 தான்.
ஏப்ரல் 13-ந் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 77.8 சதவீத வாக்குகள் பதிவாயின. ஒரு மாதம் கழித்து மே 13-ந் தேதி தான் வாக்குகள் எண்ணப்பட்டன.

அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் பெரும் வெற்றியை ஈட்டின. திமுக அணி படுதோல்வியை சந்தித்தது.
அதிமுக 148, தேமுதிக 29, மார்க்சிஸ்ட் 10, இந்திய கம்யூ 9, சமத்துவ மக்கள் கட்சி 2, மனிதநேய மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, பார்வர்டு பிளாக் 1.
திமுக 23, காங்கிரஸ் 5, பாமக 3.
அதிமுகவுக்கு 6-வது முறை ஆட்சி (1977, 80, 84, 91, 2001, 2011)
ஜெயலலிதாவுக்கு 3-வது முறை ஆட்சி (1991, 2001, 2011) என்ற வகையில், 16-5- 2011 அன்று ஜெயலலிதா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றார்.
29 இடங்களைப்பெற்ற தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.

விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவரானார்.

2001 தேர்தல் போலவே வலுவாக அமைந்த கூட்டணி ஜெயலலிதா ஆட்சியைப்பிடிக்க உதவியது, அதிலும் விஜயகாந்த் வாக்குகள் அவருக்கு பிளஸ் ஆக அமைந்தன. திமுகவுக்கு மின்வெட்டு, 2ஜி வழக்கு, மிகவும்
குறைந்தஇடங்களில் போட்டியிட்டது, இலங்கைத் தமிழர் உயிரிழப்பில் காங்கிரஸ் மீதான மக்கள் கோபம் போன்றவை பெரும் மைனஸ் ஆக அமைந்து விட்டன.

2011 தேர்தல் கண்ணோட்டம்

மொத்த வாக்குகள் 4,71,15,846
பதிவு 3,68,86,226 (78.29%)

அதிமுக (சமக உள்பட) 150 (1,41,50,289; 38.4%)
தேமுதிக 29 (29,03,828; 7.9%)

சிபிஎம் 10
சிபிஐ 9
மநேமக 2
புதிய தமிழகம் 2
பார்வர்டு பிளாக் 1
(மொத்த இடம்: 203; 1,90,85,762; 51.9%)

திமுக 23 (82,49,991; 22.4%)
காங் 5 (34,26,432; 9.3%)
பாமக 3 (19,27,783; 5.2%)
விசிக 0 
கொங்கு மக்கள் கட்சி 0

(மொத்தம் 31; 1,45,30,215; 39.5%)

எதிர்க்கட்சித்தலைவரானார், விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லை என
சொல்லி வந்தவர் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததால் 29 எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.
அதனால் அவர் பெரிய கட்சியான திமுகவை பின்னுக்குத்தள்ளி விட்டு எதிர்க்கட்சித்தலைவர் அந்தஸ்து பெற்றார்.

முந்திய தேர்தலில் விருத்தாசலத்தில் வென்ற அவர் இம்முறை
ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாக்கு விவரம்:
விஜயகாந்த்  91,164
சிவராஜ் (காங்) 60,369

(வித்தியாசம் 30,795)

தொகுதி மாறிய தலைவர்கள்

திமுக தலைவர் கருணாநிதி இம்முறை சென்னையில் இருந்து தொகுதி
மாறி திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாக்கு விவரம்:
கலைஞர் 1,09,014
குடவாசல் ராஜேந்திரன் (அதிமுக) 58,765
(வித்தியாசம் 50,249).

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் இருந்து மாறி ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாக்கு விவரம்:
ஜெயலலிதா 1,05,328
ஆனந்த் (திமுக) 63,480
(வித்தியாசம் 41,848).

(அடுத்த தேர்தல் 2016)

-(கட்டுரைத்தொகுப்பு: மணிராஜ்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *