ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பெண்கள் ஓட்டுப்பதிவு அதிகரிப்பு
1 min read
Women’s voter turnout increases in five state assembly elections
9/5/2026
தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஓட்டுப்பதிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்கத்தில் பால்டா சட்டசபை தொகுதி தவிர 293 சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சதவீதம் 93.71 சதவீதம் பதிவானது. இதில், பெண் வாக்காளர்கள் மட்டும் 93.8 சதவீதம் பேர். தமிழகத்தில், 85.01 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், பெண் வாக்காளர்கள் மட்டும் 86.2 சதவீதம் பேர். ஆண் வாக்காளர்களின் ஓட்டுக்கள், 83.77 சதவீதம் மட்டுமே பதிவானது.
அசாம் சட்டசபை தேர்தலில், 85.74 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இதில், பெண் வாக்காளர்கள் மட்டும் 86.53 சதவீத பேர் ஓட்டளித்துள்ளனர். கேரளாவில், மொத்தம் 78.11 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இங்கு பெண்களின் ஓட்டு சதவீதம் 81.17 ஆக பதிவானது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மொத்தம் 89.82 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இதில், பெண் வாக்காளர்கள் மட்டும் 91.39 சதவீத ஓட்டுக்கள் பதிவிட்டுள்ளனர்.
இதேபோல் அதிகபட்சமாக 37 பெண் எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. அடுத்ததாக, தமிழகத்தில், 23 பெண் எம்.எல்.ஏ.,க்களும், கேரளாவில் 11 பெண் எம்.எல்.ஏ.,க்களும், அசாமில், ஏழு பெண் எம்.எல்.ஏ.,க்களும் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, அதிக ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்ட மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. இங்கு, 85,092 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அடுத்ததாக, தமிழகத்தில் 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இந்த சட்டசபை தேர்தலில், அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு, 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேற்கு வங்கத்தில், 2,920 வேட்பாளர்களும், கேரளாவில், 883 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். தேர்தல் நடந்த மாநிலங்களில் நோட்டாவுக்கு ஓட்டளித்த வாக்காளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில், 0.4 சதவீத ஓட்டுக்கள் மட்டும் பதிவானது. அதிகபட்சமாக, அசாமில், 1.23 சதவீத ஓட்டுக்கள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளன.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.