பரந்தூர் விமான நிலையம் திட்டம் பற்றி அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை
1 min read
Vijay discusses Paranthur airport project with officials
15.5.2026
பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் இன்று (மே 15) அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார்.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு இடம் இல்லை. எனவே, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் பொது – தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க, தி.மு.க., தலைமையில் இருந்த கடந்த தமிழக அரசு முடிவு செய்தது.
விமான நிலையத்திற்காக பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலம் தேவை. விவசாய நிலங்கள் பறிபோகும் அபாயத்தால், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க., தலைவர் விஜய், 2025 ஜனவரியில் பரந்துாருக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து உள்ளதால், அத்திட்டம் ரத்து செய்யப்படுமா அல்லது தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழலில் இன்று (மே 15) சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் பரந்தூர் விமான நிலையம் திட்டம் குறித்து முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். விரைவில் அரசு தன் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனையில் பி.எம்.டபிள்யூ., டி.வி.எஸ்., ஹட்சன் உள்ளிட்ட மோட்டார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்தும் விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேகதாது அணை விவகாரம், ஜூன் 12ல் மேட்டூர் அணையில் நீர் திறப்பது உள்ளிட்டவை குறித்து நீர்வளத்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாருதல், குறுவை சாகுபடி, பயிர்க்காப்பீடு உள்ளிட்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது.