August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் திமுக தீர்மானிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

DMK is the movement that will determine the political course of Tamil Nadu: MK Stalin

20.5.2026
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்திற்குத் திரண்டு வரும் உடன்பிறப்புகளின் முகம் கண்டு, உங்களில் ஒருவனான நான் ஊக்கம் பெறுகிறேன். என்னைக் கண்ட நொடியில், உடன்பிறப்புகள் தங்கள் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த கவலையிலிருந்து விடுபடுகிறார்கள். அவர்களின் உணர்வு மழையில் நான் நனைகிறேன். சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளின் உணர்வுகளையும் கவனிக்கிறேன். தேர்தல் முடிவுகளை கடந்த கழக உணர்வே நம் வலிமை.

வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை. இது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்த மகத்தான தலைவரான முத்தமிழறிஞர் கலைஞர் தேர்தல் களத்தில் பெறாத வெற்றியுமல்ல, அடையாத தோல்வியுமல்ல. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அவரது பயணமும் கழகத்தின் பயணமும் ஓய்வதேயில்லை.

தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான், சுவரில் அடித்த பந்து போல கழகம் அதிக வேகத்துடன் திரும்பவும் களத்திற்கு வரும். ஏனென்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இனம் – மொழி காத்திடும் சமூகநீதி இயக்கம். தமிழ்மொழிக்காகத் தன்னுயிரைத் தந்த தியாகத் தொண்டர்களின் இயக்கம். தமிழ்நாட்டின் நலன் காக்க சிறை கண்ட தலைவர்களின் இயக்கம். துரோகங்களை எதிர்கொண்டு முறியடித்த இயக்கம். தோல்வியைப் படிக்கட்டுகளாக்கித் திரும்பத் திரும்ப வென்று காட்டும் வலிமை கொண்ட இயக்கம்.

தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் தி.மு.க.தான் இருக்கிறது. அதன் வலிமையைப் பெருக்குகின்ற வகையில், திமுகவின் அமைப்பு முறையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்கு உங்களில் ஒருவனான நான், உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். உடன்பிறப்புகள் அனைவரின் பங்களிப்பும் சிறந்த முறையில் வெளிப்படும் இயக்கமாகக் கழகம் திகழும்.

உங்களால் கழகத் தலைவராக நான் பொறுப்பேற்றிருந்தாலும், உங்களைப் போல நானும் முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புதான். கழகத்தின் முதன்மைத் தொண்டன் என்ற உணர்வுடனேயே என் பணியினைத் தொடர்கிறேன். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரிடம் நேரில் கற்ற அரசியல் பாடத்தை நெஞ்சில் ஏந்தி, நம் கழகப் பயணம் என்றென்றும் தொடர்ந்திடும்.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஜூன் 3-ம் தேதி வந்தாலே ஒவ்வொரு ஆண்டும் நம் உடன்பிறப்புகள் அனைவருக்கும் புத்துணர்வு ஏற்படும். சோர்வு – கவலை – விரக்தி எல்லாவற்றையும் ‘கலைஞர்’ எனும் குருதியுடன் கலந்த உணர்வு விரட்டியடித்து, களத்தில் நம்மை ஊக்கத்துடன் பணியாற்றச் செய்யும். கலைஞரின் உடன்பிறப்புகளான நமக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதற்காகவே வரவிருக்கிறது, ஜூன் 3.

கலைஞரின் 103-வது பிறந்தநாளான வரும் ஜூன் 3-ம் தேதி நமக்கான புத்தெழுச்சி நாளாக அமையட்டும். தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம். கழகக் கிளைகள் எங்கும் கருப்பு – சிவப்பு இருவண்ணக் கொடி உயர்ந்து பறக்கட்டும். நலிந்தோருக்கும் – ஏழைகளுக்கும் உதவி செய்யும் நிகழ்வுகள் நடக்கட்டும். 75 ஆண்டுகளைக் கடந்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூத்த முன்னோடிகளுக்கு உதவிடும் வகையில் தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கழக நிர்வாகிகள் கொண்டாட வேண்டும்.

கடந்த இரண்டு வாரங்களாக கழகத்தில் புதிய இளைஞர்களின் பங்களிப்பை சமூக வலைதளங்களில் அதிகளவில் காண்கிறேன். தகவல் தொழில்நுட்பத்திற்கான கொள்கையை வகுத்து, தமிழ் இணைய மாநாட்டினை நடத்தி, இன்றைய டிஜிட்டல் பெரும்பாய்ச்சலுக்கு அன்றே வழிவகுத்த முத்தமிழறிஞர் கலைஞரை இளைய தலைமுறை நினைவில் கொண்டு, எக்ஸ்- இன்ஸ்டாகிராம் – யூடியூப் – பேஸ்புக் – வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும், நவீனத் தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பியான தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைக் காணொளிகளாகப் பரப்புங்கள்.

தி.மு.க.வினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் மீது ஆணையிட்டு உறுதியேற்போம். தமிழ்நாட்டின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *