July 10, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை மீட்பு

1 min read

Baby elephant separated from mother rescued in Courtallam

22.5.2026
தென்காசி மாவட்டம் குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், தனது கூட்டத்தைப் பிரிந்து தனியாகத் தவித்த ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு, அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குற்றாலம் காப்புக்காடு அருகில் உள்ள மலையடிவாரப் பகுதியில் நேற்று முன் தினம் ஒரு குட்டி யானை மட்டும் தனியாக நிற்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். யானைக் கூட்டம் அந்த குட்டியை விட்டுவிட்டுச் சென்றதை அடுத்து, தென்காசி மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் வனத்துறையினர் உடனடியாகக் குட்டியை மீட்டனர்.

மீட்கப்பட்ட குட்டி யானைக்கு ஐந்தருவி அருகே உள்ள காட்டுப் பகுதியில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வன கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குட்டி யானையின் உடல்நிலையைக் கண்காணித்து உரிய முதலுதவி மற்றும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. குட்டியைப் பிரிந்த யானைக் கூட்டம் அந்தப் பகுதியிலேயே சுற்றித் திரிவதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதன் தாய் யானையுடனும், கூட்டத்துடனும் சேர்க்கும் பணிகளுக்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன கருவிகள் மற்றும் கண்காணிப்பு மூலம் யானைக் கூட்டத்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, யானைக்குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..

குட்டி யானை ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் அது அதன் தாயுடன் சேர்த்து வைக்கப்படும் என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *