நெல்லை: பெட்ரோல் குண்டு வீசிய 3 சிறுவர்கள் கைது- 3 போலீசார் மீதும் நடவடிக்கை
1 min read
3 boys arrested for throwing petrol bomb at outpost – action taken against 3 policemen
23.5.2026
நெல்லை அருகே இராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தில் சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக 3 போலீசார் மீது நடவடிக்கை பாய்ந்தது. அதன்படி அவர்கள் 3 பேர்களும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள இராமையன் பட்டி புறக்காவல் நிலையத்தில் சம்பவத்தன்று மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிட மான முறையில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 3 பேரிடமும் வாகன ஓட்டுனர் உரிமம் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டர் சைக்கிள் சாவியை பறித்துக்
கொண்ட போலீசார், பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே சாவியை திரும்ப ஒப்படைப்போம் என சிறுவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது போலீசாரின் கவனம் திசை திரும்பியதும், அந்த சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை மெதுவாக அங்கிருந்து உருட்டிக்கொண்டே வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இரவில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து 10 மில்லி பெட்ரோலை சிறிய பாட்டிலில் அடைத்துவிட்டு மாற்று சாவி மூலம் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மீண்டும் இராமையன்பட்டி புறக்காவல் நிலையத்திற்கு இரவு வந்தனர்.
அங்கு போலீசார் பணியில் இருந்தபோது, 3 சிறுவர்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டை புறக்காவல் நிலைய சுவர்களில் வீசி எறிந்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மானூர் போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய 3 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் முறையாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர்கள் சுடலைக் கண்ணு, ஆனந்த பாண்டி மற்றும் இந்த சம்பவத்தை பற்றி அறியாத உளவுப்பிரிவு போலீஸ்காரர் அந்தோணி
ஆகிய 3 பேரையும் நெல்லை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிர சன்னகுமார் நேற்று உத்தர விட்டார்.
நெல்லை அருகே 3 போலீசார் மீது நடவடிக்கை பாய்ந்த விவகாரம் மற்ற போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.