August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

பஹல்காம் தாக்குதலில் தொடர்பு என கூறி- ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 3.83 கோடி பறிப்பு

1 min read

Retired bank manager swindled of Rs3.83 crore over alleged link to Pahalgam attack.

27.8.2026
“பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உங்கள் மொபைல் சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஏமாற்றி ரூ.3.83 கோடி பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

மும்பை ஜூஹு பகுதியை சேர்ந்த 64 வயதான ஓய்வுபெற்ற வங்கி மேலாளருக்கு போன் ஒன்று வந்துள்ளது. மறுபக்கம் பேசிய நபர் தங்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் என கூறியுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அவரது பெயரிலான சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாக கூறி அவரை பயமுறுத்தியுள்ளனர்.

கைது வாரண்ட் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் போல் சில போலி ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, தனது சேமிப்பு, முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளின் விவரங்களை அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.

பின்னர், லக்னோவை சேர்ந்த ஐஜி விக்ரம் சிங் என்ற மூத்த அதிகாரி பேசுவதாக மற்றொரு நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இவரது பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் ரூ.7 கோடி ரூபாய் பயங்கரவாத நிதி கைமாறியுள்ளதாக மிரட்டியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் பெயரிலான போலி கடிதத்தை அனுப்பி, அவரது அனைத்து நிதி ஆதாரங்களையும் மோசடிக்காரர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர்.

விசாரணைக்காக பணத்தை சரிபார்த்துவிட்டு மீண்டும் திருப்பித் தருவதாக கூறியதை நம்பிய ஓய்வுபெற்ற அதிகாரி, ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலகட்டத்தில் 4 கட்டங்களாக சுமார் ரூ.3.83 கோடி ரூபாயை மோசடி நபர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறி அவரை வாட்ஸப் வீடியோ காலில் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

பணத்தைத் திருப்பித் தராமல் மீண்டும் கூடுதல் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த அவர், வங்கி மேலாளர் ஒருவரை அணுகியுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்த முதியவர் சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *