October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கூட்டநெரிசல்: பாவூர்சத்திரம், ஆலங்குளத்தில் ஒன் டூ ஒன் பேருந்து நின்று செல்ல கோரிக்கை

1 min read

Overcrowding: Demand for ‘One-to-One’ bus service at Pavoorchatram and Alangulam.

12.10.2026
வெற்றிப்பயணம் திட்டத்தால் கூடுதல் நெரிசல் ஏற்படுவதால போதிய பேருந்து வசதியின்றி பாவூர்சத்திரம், ஆலங்குளம் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.; எனவே மேற்படி பேருந்து நிலையங்களில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்ற செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகளின் வசதிக்காக ஒன் டூ ஒன் பேருந்துகள், சாதாரண கட்டண லோக்கல் பேருந்துகள் என பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வழித்தடத்தில் உள்ள பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை பாவூர்சத்திரம், கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, கல்லூரணி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், அரியப்பபுரம், மேலப்பாவூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அதேபோல் ஆலங்குளம் பேருந்து நிலையத்திலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்துகளில் ஏறி, இறங்கி செல்கின்றனர்.

ஆனால் இவ்விரு முக்கிய பேருந்து நிலையங்களிலும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் லோக்கல் பேருந்துகள் மட்டுமே நின்று செல்வதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பல நேரங்களில் பேருந்துகளில் உட்கார இடம் இல்லாததுடன், நின்று செல்வதற்கும் இடமில்லாமல் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் சில பேருந்துகளில் விதிமுறைகளின்படி படிக்கட்டு கதவுகளை கூட முறையாக மூட முடியாத நிலை உள்ளது.

தற்போது தமிழக அரசின் வெற்றிப்பயணம் திட்டம் மூலம் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதால் வழக்கத்தை விட பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் பெண்கள் மிகுந்த பயன்பெறுகின்றனர் என்பது வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும், ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரத்தில் இருந்து தினந்தோறும் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக செல்வோர் பேருந்தில் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

ஆனால் அந்த சமயங்களில் தென்காசியில் இருந்து வெற்றி பயணம் திட்டம் இல்லாமல் இயக்கப்படும் ஓன் டூ ஒன் பேருந்துகள் கூட்ட நெரிசல் இன்றி செல்கிறது.
எனவே இப்பேருந்துகளை அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தும் பாவூர்சத்திரம், ஆலங்குளத்தில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்கும் படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு செய்வதால் போக்குவரத்து கழகத்திற்கும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், மேற்படி இரண்டு பேருந்து நிலையங்களையும் பயன்படுத்தும் 100க்கணக்கான கிராமப்புற பொதுமக்களும் மிகுந்த பயன்பெறுவர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *