வட்டி – சிறுகதை – முத்துமணி
1 min read
Vatti – Short story By Muthumani
19-5-2020
நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல பஸ் மக்கள் கூட்டத்தால் நிறைந்து இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக காலைக்கூட தரையில் வைக்க முடியாத அளவிற்கு ஒரு காலை ஊன்றி கொண்டு மேலே சப்போர்ட் கம்பியை பிடித்தவாறு பயணம் செய்வது ஒரு கலை. வண்டியின் வேகத்திற்கு தக்கவாறு நம்மை நாம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளவேண்டும். அதைவிட மிகப் பெரிய விஷயம் திடீரென்று பிரேக் போடும்போது தவறிக்கூட முன்னால பின்னால இருக்கிற பெண் மீது இடித்து விடக்கூடாது.
இப்படி கவனமாய் பயணம் செய்யும்போது கையில் ஆபீசுக்கு கொண்டுசென்ற ஹான்ட் பேக் அதை எங்கே வைப்பது என்பது மிகப் பெரிய சிரமம். மேலே தூக்கி வைத்தால் யார் தலையிலாவது இடிக்கும். தொங்கவிட்டபடி சென்றால் போவோர் வருவோர் காலில் இடிக்கும் .இப்படி ஆயிரம் பிரச்சனையோடு தான் பயணம் செய்கிறோம்.
திடீரென்று நடத்துனர் வந்து டிக்கெட்டுக்குப் பணம் கேட்கிறபோது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுப்பதும் அவரிடம் கொடுத்து டிக்கெட் வாங்குவது மீதி சில்லறை வாங்குவதும் அதை மீண்டும் பைக்குள் வைப்பதும் ஒரு ஜாலவித்தை போல செய்ய வேண்டும். இல்லை என்றால் கீழே விழுந்து மூக்கை கூட உடைத்துக் கொள்ள நேரிடும். இவ்வாறு சிந்தித்துக்கொண்டு தினமும் பயணம் செய்கிறேன்.
நான் பின்னால் நிற்கிறேன் கண்டக்டரின் சத்தம் முன்னாடி கேட்கிறது.
“டிக்கெட் டிக்கெட் கேட்டு வாங்குங்க. இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தா முன்னாடியே சொல்லுங்க. இறங்கவேண்டியவங்க கொஞ்சம் முந்தி வாங்க” என்று சத்தமிட்டபடி
“வேறு டிக்கெட்… வேற டிக்கெட்…” முன்னால் இருந்து வந்து கொண்டிருந்தார். இப்போதுதான் சிந்தித்தேன் ஓரிடத்தில் கம்பியை பிடித்துக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்கும் நமக்கு இவ்வளவு சிரமம் இருக்கிறது .இந்தக்கூட்டத்திற்கு முன்னும் பின்னும் சென்று ஒவ்வொரு ஸ்டாப்பில் இறக்கிவிட புதிதாய் புதிதாய் ஏறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் டிக்கெட்டை கொடுத்து பணத்தை வாங்கி மீதி சில்லறை கொடுக்கும் வேலை. கூட்டத்திற்குள் புகுந்து புகுந்து உள்ளே வர வேண்டும் யார் மீதும் இடித்து விடக்கூடாது. யார் காலையும் மிதித்து விடக்கூடாது. பெண்கள் நிற்கிறார்கள்… ஒருவேளை தவறுதலாக இடித்து விட்டாலும் மன்னிப்பு கேட்க வேண்டும். யாரிடமும் டிக்கெட் வாங்காமல் விட்டுவிடவும் கூடாது. எல்லோரையும் உரசிக்கொண்டு தான் வரவேண்டும் .தன் கையில் இருக்கிற பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எதையும் பிடிக்காமல் நின்றுகொண்டு டிக்கெட் எழுத வேண்டும் அல்லது கிளிக்க வேண்டும்.
எப்படித்தான் வேலை செய்கிறார்கள் இந்த கண்டக்டர்கள் என்று நினைத்தபடியே என்ற போது கூட்டத்தை கிழித்துக்கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு என்னை நெருங்கினார் கண்டக்டர்.
நூறு ரூபாயைக் கொடுத்தேன்.
“சில்லறை இல்லையா” என்று கேட்டார்.
மண்டையை மட்டும் ஆட்டினேன்.
“இந்தாங்க டிக்கெட் திரும்ப வந்து சில்லறை தாரேன்” என்று சொல்லிவிட்டு வந்த வழியே மீண்டும் வளைந்துநெளிந்து போனார்.
இந்தக் கூட்டத்தில் திரும்ப வருவாரா சில்லறை கிடைக்குமா 25 ரூபாய் டிக்கெட் காசு போக மீதி எழுபத்தைந்து ரூபாய் திரும்ப வாங்க வேண்டுமே என்று எண்ணிக்கொண்டு அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
இரண்டு மூன்று ஸ்டாப் தாண்டி விட்டன. நான் இறங்க வேண்டிய ஸ்டாப் தான் அடுத்து வரவேண்டும். எட்டி பார்த்தேன் வந்துகொண்டிருந்தார் கண்டக்டர்.
“சார் 200 ரூபாய் தானே கொடுத்தீங்க?” என்று கேட்டார்.
“இல்லை” என்று வாய் வரை வந்தது சமாளித்துக்கொண்டு பொதுவாக “ஆமா” என்றேன்.
“இந்தாங்க பாக்கி” என்று சொன்னவர் கொடுத்ததை வாங்கி பார்த்தேன். 175 ரூபாய் இருந்தது.
புரிந்து கொண்டேன். நான் யோசிப்பதற்குள் கூட்டத்திற்குள் போய்விட்டார் கண்டக்டர்.
கூப்பிட்டு சார் நான் 100 ரூபாய் தான் கொடுத்தேன் என்று சொல்லிவிடலாமா என்று மனசாட்சி சொன்னது. அதே நேரத்தில்… ‘நாம் ஒன்றும் ஏமாற்ற வில்லையே அவராகத் தானே கொடுத்தார். போன வாரம் கூட ஒரு கண்டக்டர் பாக்கி 5 ரூபாயை கொடுக்காமல் சுருட்டிக் கொண்டாரா. இதைப்போல இவர்கள் எல்லாம் செய்வார்கள். கூட்டமான பஸ்ஸில் சிலறையே தரமாட்டார்கள். இவரும் அப்படித்தான் இருப்பார். இன்றைக்கு கடவுளாக பார்த்து செய்த காரியம். இது நாம் ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று எண்ணம் தோன்ற பணத்தை அப்படியே பாக்கெட்டுக்குள் அமுக்கி கொண்டேன்.
ஸ்டாப் வரும்வரை மனதுக்குள் ஒரு லப்-டப் சத்தம். விசில் சத்தம் கேட்டது ஸ்டாப் வந்தவுடன் கூட்டத்தை கூட கவனிக்காமல் ஓரிருவர் கால்களில் மிதித்து வசவையும் வாங்கிக்கொண்டு வண்டியை விட்டு இறங்கி விட்டேன்
நெஞ்சு படபடப்பு குறைந்தது. நடந்து வீடு வந்து சேர்ந்தேன்.
“என்னங்க காபி சாப்பிடுங்க” என்று மனைவி கொண்டு வந்த காபியை கையில் வாங்கிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தேன்.
“என்னங்க மதியம் சாப்பிட்டு விட்டு படுத்தேன் தூக்கம் வரல… கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம்ன்னு நினைச்சு டிவியை போட்டேன் படம் வரல. கரண்டு இருக்கு படம் வரலையே பக்கத்து வீட்டு அக்காவிடம் கேட்டேன். அங்கெல்லாம் படம் தெரியுது. கேபிள் டிவி பையனுக்கு போன் பண்ணினேன். அவன் எல்லா இடத்திலும் வருது உங்க டிவில தான் பிராப்ளம் இருக்குன்னு சொல்லிட்டான்.
உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன் ஆபீஸ்ல வேலையா இருப்பீங்க கோவம் வந்துரும். கேபிள் டிவி பையனுக்கு மறுபடி போன் பண்ணி யாரையாவது வச்சு டிவி பாக்க முடியுமான்னு கேட்டேன். முடிஞ்சா அனுப்புறேன்னு சொன்னான். .கொஞ்ச நேரத்துல ஒருத்தர் வந்து பார்த்தார். சின்ன ப்ராப்ளம் தான் இருக்கு. சரியா போயிடும்னு சொல்லிட்டு படம் வர வச்சிட்டாரு. நல்ல மனுஷன் 200 ரூபாய் மட்டும்தான் வாங்கினார்.” என்றாள்.
என் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தது போல இருந்தது.
காலையில் ஆபீசுக்கு புறப்படும்போது அவள் பாத்ரூமில் இருந்தாள். இடியும் மின்னலும் ஆக இருந்தது மழை வருவதை போல் இருட்டிக் கொண்டு வந்தது ஒரு வேளை மின்னல் அடித்து டிவிக்கு ஏதாவது ஆகி விடக்கூடாது என்பதற்காக நான்தான் பின்னாடி கைவிட்டு சுவிட்ச் ஆப் பண்ணி வைத்து விட்டு பிளக்கை உருவி போட்டு விட்டு சென்றேன்.
வந்தவன் பிளாக்கை சொருகிட்டு 200 ரூபாய் பிடுங்கிட்டன்.
“பூக்காரியிடம் 100 பூ வாங்கினால் கூட சரியாக 100 இருக்கிறதா என்று எண்ணிப் பார்ப்பாய். 200 ரூபாய் தூக்கிகொடுத்து விட்டாயா?” என்று கேட்டேன்.
“ஆமா ரெண்டே நிமிஷத்துல டிவி தெரிய வச்சிட்டார் இல்லை” என்றாள்.கடவுளே 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டேன் வட்டியோடு சேர்த்து வசூல் செய்து விட்டாயே.