அறிவோம் தேர்தல் வரலாறு/ 1962: 3-வது முறையாக காமராஜர் ஆட்சியை பிடித்தார்
1 min read
Arivom Election History / 1962: Kamaraj came to power for the 3rd time
சென்னை மாகாண சட்டமன்றம் 3;-வதுதேர்தலை சந்தித்தபோது,மொத்தத் தொகுதிகள் 205-ல் இருந்து 206 ஆக உயர்ந்து இருந்தது. (ஆந்திர மாநிலத்தில் இருந்த ஒரு தொகுதி தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது).
இந்த முறை இரட்டைத்தொகுதி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. ஒரே தொகுதியில்
இரு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது நடைமுறையில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரம் பட்டியலினத்தவர்க்காக தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
முந்திய தேர்தலைப்போலவே, 38 உறுப்பினர்களுக்கு 38 தொகுதிகள் என பட்டியலினத்தவர் தொகுதிகள் கணக்கிடப்பட்டன.
திமுகவின் வளர்ச்சி; காமராஜரின் வியூகம்
இந்த முறை அரசியல் களம் மிகவும் சூடாக இருந்தது. மாநிலக் கட்சியான திமுக வின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருந்ததால், அதைச் சமாளிப்பதற்கு முதல்&அமைச்சர் காமராஜர் சில வியூகங்களை வகுத்தார். அதாவது பணபலமும் செல்வாக்கும் மிக்க வேட்பாளர்களை தேர்வு செய்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
திமுகழகம் வளர்ந்து வந்த அதே நேரத்தில் ஒரு பிளவையும் சந்திக்க நேரிட்டது. ஈவெகி சம்பத், கண்ணதாசன் போன்றவர்கள் திமுகவில் இருந்து பிரிந்து சென்றனர். தமிழ் தேசிய கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார், சம்பத். ஆனாலும் கட்சியை சேதாரம் இன்றி கொண்டு சென்றார், அண்ணா.
பெரியாரின் ஆதரவு
சட்டமன்றத்தேர்தல் 1962 பிப்ரவரி 21-ந் தேதி நடைபெற்றது. காமராஜர் தலைமையில் களம் இறங்கிய காங்கிரசுக்கு ஈவெரா பெரியார் ஆதரவு அளித்தார். “தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய காமராஜர் ஒருவரால் மட்டுமே முடியும். எனவே அவரை விடாதீர்கள். கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். எனக்கு வயதாகி விட்டது. நான் இருக்கப்போவது எத்தனை நாளோ தெரிய வில்லை” என்று பெரியார் பேசியது உருக்கமாக இருந்தது.
முந்திய தேர்தலில் சீர்திருத்த காங்கிரசாக களம் கண்டிருந்த ராஜாஜி, இம்முறை சுதந்திரா கட்சியை தொடங்கி இருந்தார். ஆனால் அவரது கட்சியை விடவும் திமுகழகம் பல மடங்கு முன்னேறி வளர்ந்து இருந்தது.
தேர்தல் களத்தில் காங்கிரசை எதிர்த்து, திமுக தலைமையில் ஓரணி அமைந்து வலுவான போட்டியை கொடுத்தது. திமுக அணியில் சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. திமுக 143 இடங்களில் மட்டும் போட்டியிட்டு விட்டு மீதி இடங்களை தோழமைக்கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது. இந்த முறை திமுகவுக்கு அதிகாரபூர்வ சின்னமாக உதயசூரியன் கிடைத்து விட்டது.
1957-ல் திமுக 15 இடங்களை வென்றது போல் இந்த முறை வென்று விடக்கூடாது என்பதில் காமராஜர் தீவிரம் காட்டினார்.. அப்போது திமுக வென்ற காஞ்சீபுரம், குளித்தலை உள்ளிட்ட 15 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்தி பணபலம் மிக்க வலுவான வேட்பாளர்களை நிறுத்தினார்.
காங்கிரசுக்கு பிரசாரம் செய்வதற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தலைமையில் நடிகர்-நடிகைகள் பட்டாளம் களம் இறங்கியது. திமுகவுக்கு எம்ஜிஆர், எஸ்எஸ் ராஜேந்திரன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரசின் தேர்தல் பிரசாரப் படம் ‘வாக்குரிமை’ என்ற பெயரில் சினிமா கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
ஆட்சியைத் தக்க வைத்த காங்கிரஸ்
1962 தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 70.65.
கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடந்த இந்தத் தேர்தலில் காங்கிரஸ்
போட்டியிட்ட 206&ல் 139 இடங்களைக்கைப்பற்றி ஆட்சியைத்
தக்கவைத்துக்கொண்டது என்றாலும், அதற்கு அதிர்ச்சியூட்டும் விதமாக
திமுகழகம் 50 இடங்களை வென்று இருந்தது. முந்தியதேர்தலை விட 12
இடங்களை காங்கிரஸ் இழந்து இருந்தது; திமுகவோ 35 இடங்களை
அதிகமாகப்பெற்றிருந்தது. சுதந்திரா 6, பார்வர்டு பிளாக் 3, இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களை வென்றன.
பெரும்பான்மைக்குத் தேவையான 104 இடங்களை விட 35 இடங்களை
கூடுதலாகப் பெற்றிருந்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தது. காமராஜர் 3-வது முறையாக முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றார். அவரது அமைச்சரவையில் பக்தவத்சலம், சி.சுப்பிரமணியன், ஆர்.வெங்கட்ராமன், ஜோதி வெங்கடாசலம், கக்கன், அப்துல் மஜீத், ராமையா, நல்ல சேனாபதி, சர்க்கரை மன்றாடியார், பூவராகன் ஆகியோர் இடம் பெற்றனர்.

3 முறை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த காமராஜர், காங்கிரஸ் கட்சியின் நலன் கருதி ஒரு அதிரடி முடிவு எடுத்தார். “காமராஜ் பிளான்” என்று அழைக்கப்பட்ட அந்தத் திட்டமானது, “ஆட்சிப் பதவிகளில் இருப்போர் அவற்றைத்துறந்து கட்சிப்பொறுப்பை ஏற்று, கட்சியை வளர்க்க பாடுபடவேண்டும்” என்பதாகும்.
இத்திட்டத்தை அறிவித்த அவரே முதல் ஆளாக முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, கட்சிப்பணிக்குச்சென்றார். ஆனால் அகில இந்திய அளவில் அவரது முடிவை கட்சியில் சில தலைவர்களே ஏற்றனர். மற்றவர்கள் ஆட்சிப்பொறுப்பை துறக்க முன்வரவில்லை. என்றாலும், காமராஜர் தனக்குப்பதில் பக்தவத்சலத்தை முதல்-அமைச்சராக்கி விட்டு அகில இந்திய அளவில் கட்சி வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார்.
ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்டெறும்பாகத்தேயத்தொடங்கி விட்டது. அதற்கு ஏற்றவாறு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் இந்தியைத் திணிப்பதில் தீவிரம் காட்டியதால் தமிழகம் கிளர்ந்து எழுந்து மாற்றத்துக்கு தயாரானது.
3&வது முறையாக முதல்வரான காமராஜர் பதவி விலகிய தேதி 2-10-1963. அதாவது காந்தி பிறந்த நாளில் அவர் பதவியைத்துறந்தார். மற்றோர் ஆண்டில் அதே நாளில் தான் (2-10’-1975) அவர் இவ்வுலகை விட்டும் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்திய மாநிலங்கள் அனைத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த 1967 தமிழகதேர்தல் முடிவுகளை அடுத்து காண்போம்).
காமராஜர்
(3-3-1962 முதல் 2-10-63 வரை)
பக்தவத்சலம்
(2-10-63 முதல் 28-2-67 வரை)
===
=மணி, திருநெல்வேலி
