April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தெரிந்து கொள்வோம் தேர்தல் வரலாறு(9): 1989: கருணாநிதி ஆட்சியைப் பிடித்தார்

1 min read

Let us know Election History (9): 1989: Karunanidhi came to power

======
அறிவோம் மணி அவர்களை….

செய்திசாரலில் தெரிந்துகொள்வோம் தேர்தல் வரலாறு என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வருபவர் திருநெல்வேலியைச் சேர்ந்த மணி அவர்கள். இவர் தினத்தந்தியில் பல ஆண்டுகள் செய்தி ஆசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் தரும் பழைய அரசியல் கருத்துக்கள் இன்றைய இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்து.

====
2/4/2021

தமிழ்நாட்டில் 3 முறை ஆட்சியைப்பிடித்த எம்ஜிஆர் மறைவையடுத்து, அதிமுக பிளவுபட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று மோதிக்கொண்டதால், 1989 வரை நீடித்திருக்கவேண்டிய அதிமுக அரசு 88 ஜனவரியிலேயே கவிழ்ந்தது.
எம்ஜிஆர் மறைவினால் ஏற்பட்ட அரசியல் சூழலை பயன்படுத்தி, 1967-ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் திட்டம் தீட்டியது. ஆனால் காங்கிரஸ் அந்த அளவுக்கு வலுவாக இல்லை என்பது சின்னக்குழந்தைக்கும் தெரிந்த
விஷயமாக இருந்தது.

எனவே, ஜானகி தலைமையிலான அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் உடனடியாக தேர்தலை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை. முதல் 6 மாதங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதம் நீடித்தது.
இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கட்சியை வளர்த்தெடுக்கும் முனைப்பில் இறங்குமாறு தமிழ்நாடு காங்கிரசுக்கு மேலிடம் கட்டளையிட்டது. பிரதமர் ராஜீவ்காந்தி அடிக்கடி தமிழ்நாடு வந்து மக்களை சந்தித்தார். சென்னை முதல்
கன்னியாகுமரி வரை ஜீப்பை அவரே ஓட்டிச்சென்று மக்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது தமிழ்நாடு கவர்னராக நியமிக்கப்பட்டு இருந்த அலெக்சாண்டர், மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து, காங்கிரசின் பிரசாரத்துக்கு மறைமுகமாக உதவினார். இருமுறைக்கு மேல் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடியாத
நிலையில் 1989 ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

4 முனைப்போட்டி

1977-க்குப்பிறகு 1989 தேர்தலிலும் 4 முனைப்போட்டி நிலவியது. திமுக, அதிமுக(ஜெயலலிதா அணி), காங்கிரஸ், அதிமுக (ஜானகி அணி) என 4 கட்சிகள் நேரடியாக மோதின. நடிகர் சிவாஜிகணேசன் காங்கிரசில் இருந்து விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கி இருந்தார். அவர் ஜானகி அணியில் இடம்
பெற்றார்.
திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய லீக், ஜனதா தளம் முதலிய கட்சிகள் கூட்டு சேர்ந்து இருந்தன. ஜெயலலிதா அணியுடன் இந்திய கம்யூனிஸ்டு கூட்டு சேர்ந்தது. காங்கிரசுடன் முஸ்லிம் லீக் சேர்ந்தது.
அதிமுக பிளவுபட்டதால் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டு ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும் ஒதுக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என முழங்கியது. கருப்பையா மூப்பனார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

13 ஆண்டுக்குப்பின் அரியணையில் அமர்ந்தார், கலைஞர்

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்தத்தேர்தலில் 69.69 சதவீத ஓட்டுகள் பதிவாயின. தேர்தல் முடிவுகள், திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆட்சியை பரிசாக அளித்தன.13 ஆண்டுகளுக்கு மேல் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அவர்
அரியணை ஏறினார். ஆட்சியைப்பிடிப்போம் என முழங்கிய காங்கிரஸ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
கட்சிகளின் வெற்றி நிலவரம் திமுக 145, மார்க்சிஸ்ட் கம்யூ 11, தேசிய லீக் 5, ஜனதா தளம் 4. ஜெயலலிதா அணி 27, இந்திய கம்யூ 2. காங்கிரஸ் 26. ஜானகி அணி 1.
திமுக வாக்குகள் 91,35,220 (37.89 சதவீதம்)
ஜெயலலிதா அணி 53,93,857 (22.37%)
காங்கிரஸ் 47,80,714 (19.83%)
ஜானகி அணி 22,14,965 (9.19%).

புதிய கட்சி தொடங்கிய சிவாஜிகணேசனின் தோல்வி 1977 போலவே 1989 தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு கட்சியின் பலத்தையும் உணர்த்தின.
திமுகழகம் முதலிடத்திலும், ஜெயலலிதா அணி 2-வது இடத்திலும், காங்கிரஸ் 3-வது இடத்திலும், ஜானகி அணி 4-வது இடத்திலும் வந்தன.
ஒன்றுபட்ட அதிமுகவின் வாக்குகளைக் கணக்கிட்டால் திமுகவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது.
திமுக தலைவர் கருணாநிதி, அண்ணாநகரில் இருந்து இம்முறை துறைமுகம் தொகுதிக்கு மாறி போட்டியிட்டார். மிகவும் சிறிய தொகுதி எனினும், அவர் 31,991 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட வகாப் (காங் ஆதரவு மு.லீக்) உள்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதா போடி தொகுதியில் 28,731 ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முத்து மனோகரனை வென்று இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார், பாபநாசம் தொகுதியில் 1,092 ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கல்யாணசுந்தரத்தை வென்றார்.
ஜானகி அம்மாள், எம்ஜிஆர் வென்ற ஆண்டிப்பட்டியைத் தேர்வு செய்து போட்டியிட்டும் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு பரிதாபமாகத் தோற்றார். அங்கு திமுகவின் ஆசையன் 4,221 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2-வது
இடத்தில் ஜெயலலிதா அணியின் வி. பன்னீர்செல்வம் வந்தார்.
இந்தத் தேர்தலில் மிகவும் ஏமாற்றம் அடைந்தவர், நடிகர் சிவாஜிகணேசன் தான். அவரது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சி, ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 49 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்து விட்டது.
சிவாஜிகணேசனே, திருவையாறு தொகுதியில் தோற்றுப்போனார். அங்கு திமுகவின் துரைசந்திரசேகரன் 10,643 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜானகி அணி சார்பில் போட்டியிட்ட 175 வேட்பாளர்களில் முன்னாள் சபாநாயகர்
பிஎச் பாண்டியன் மட்டும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் சேர்மாதேவி தொகுதியில் வெற்றி பெற்றார்.
   
இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக

பொதுத்தேர்தலின் போது மருங்காபுரி, மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளின் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அடுத்த மாதத்தில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா, ஜானகி அணிகள் ஒன்றுபட்டு மீண்டும் இரட்டை இலைச்சின்னத்தைப்பெற்று இடைத்தேர்தலை சந்தித்தன. இதில் இரு
தொகுதிகளிலும் ஒன்றுபட்ட அதிமுக வெற்றி பெற்றது.
13 ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்சியில் அமர்ந்த கருணாநிதிக்கு அதிமுகவும் இ.காங்கிரசும் இணைந்து கடும் இடையூறுகளை உருவாக்கின. அவரால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை.
விடுதலைப்புலிகள் பிரச்சினையை காரணம் காட்டி, 1991 ஜனவரி 30-ந் தேதி திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது மத்தியில் ராஜீவ்காந்தி தயவுடன் சந்திரசேகர் தலைமையில் ஆட்சி நடந்தது. ஜெயலலிதா தொடர்ந்து
ராஜீவ்காந்தி மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து திமுக ஆட்சியை கலைக்கச்செய்தார்.
1976 போலவே 1991-லும் கருணாநிதி ஆட்சியை இழந்தார்.

(1991 தேர்தல் நிலவரத்தை அடுத்து காணலாம்).

-(கட்டுரையாளர்: மணிராஜ்,
திருநெல்வேலி).

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.