கண்ணாயிரத்தை குழப்பிய முடி பிரச்சினை/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min read
The Hair Problem That Confused Kannayiram/ Comic Story / Tabasukumar
14.9.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் எலுமிச்சம் பழத்தை தேய்த்து குளித்துவிட்டு வெளியே வந்தபோது முடி பஞ்சு போல் இருக்கிறது என்று பயில்வானும் மல்லிகை பூ போல் இருக்கிறது என்று பூங்கொடியும் சொன்னார்கள். இதை தவறாக புரிந்து கொண்ட கண்ணாயிரம் தனது முடி வெள்ளையாகி விட்டதாக அவர்கள் சொல்வதாக நினைத்து அய்யோ எல்லாம் போச்சே என்று கத்த அது நல்ல விசியம்தானே என்று எல்லோரும் ஆறுதல் சொல்ல கண்ணாயிரம் திருப்தி இல்லாமல் அலைந்தார்.
சுடிதார்சுதாவின் கைக்கண்ணாடியில் பின்னால் நின்று தனது தலைமுடி எப்படி இருக்கிறது என்று கண்ணாயிரம் பார்க்க முயல.. தலை மட்டும் சரியாக தெரியாமல் தடுமாற.. சுடிதார் சுதாவை எட்டிப்பார்ப்பதாக நினைத்து கண்ணாயிரத்தின் காதை பிடித்து பூங்கொடி திருக ஒரே பரபரப்பாக இருந்தது.
முடி எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக கண்ணாடியை எட்டிப்பார்த்ததாக கண்ணாயிரம் சொல்ல.. அதுக்கு எதுக்கு அங்கே பாக்கணும்.. நான்தான் பூவா இருக்குன்னு சொன்னேன்.. அதில் நம்பிக்கை இல்லையா என்று பூங்கொடி சொல்ல.. கண்ணாயிரம் பதில் சொல்லாமல் நின்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர்.. மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் முன்பக்க கண்ணாடியில் பார்த்து தனது தலைமுடியை சீவி ஸ்டைலாக.. நடிகர் மாதிரி கைகளை அசைத்தார்.
கண்ணாயிரம் அவரிடம் உங்க முடிநல்லா இருக்கு.. நானும் என் முடியை பாத்துக்கிறேன் என்றபடி அந்த கண்ணாடியில் முன் தலையை நீட்டி.. முடி எப்படி இருக்கிறது என்று வேகவேகமாக பார்த்தார். முடி வழக்கம் போல் கருப்பாகவே இருப்பதை பார்த்த கண்ணாயிரம்..அப்பாட தப்பிச்சேன். எலுமிச்சம் பழம் தேய்ச்சதாலே என் முடி வெள்ளையாகல..கருப்பாகவே இருக்கு..என்று மகிழ்ச்சி அடைந்தார். பிறகு ஏன் பயில்வான் என் முடியை பஞ்சா இருக்கின்னு சொன்னார்.. இந்த பூங்கொடியும் அதுக்கு சப்போர்ட்டு பண்ணுறமாதிரி ஆமா.. மல்லிகை பூமாதிரி இருக்கின்னு சொன்னா. புரிய மாட்டேங்குதே.. நம்மளை ஏமாத்தப் பாக்கிறாங்களா.. கேட்டிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தார்.
பூங்கொடியை பார்த்து ஏய் பூங்கொடி என் முடி கருப்பாத்தானே இருக்கு. பிறகு எதுக்கு மல்லிகை பூவா இருக்குன்னு சொன்ன.. காதால் கேட்பதும் பொய் கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று சொல்வாங்க.. நீ கண்ணால் பார்த்து..கருப்பா இருக்கிறதா சொன்ன நான்தான் தீர விசாரிச்சி கருப்புங்கிற உறுதி பண்ணுனேன். நீ என் முடியை மல்லிகை பூ மாதிரி இருக்கின்னு எப்படி சொல்லலாம் என்று கேட்டார்.
அதற்கு பூங்கொடி..ஏங்க உங்க முடி கருப்பா இல்லைன்னு நான் சொல்லலையே.. மல்லிகை பூமாதிரி இருக்குன்னு தானே சொன்னேன் என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது.
என்னநீ..மறுபடியும் மறுபடியும் மல்லிகை பூவை இழுக்கிற..கார் மேகம் மாதிரி முடி கரு கருன்னு இருக்கு என்று சொல்ல வேண்டியது தானே என்று எகிற.. பூங்கொடியோ.. ஏங்க.. பெண்களின் கூந்தலுக்குதான் கார்மேகமுன்னு சொல்வாங்க.. ஆண்கள் முடிக்கு அப்படி சொல்ல மாட்டாங்க..தெரியுமா.. வேணுமுன்னா தார்சாலை மாதிரி முடி இருக்குன்னு சொல்லட்டுமா அல்லது தீயில கருகுன புல்லு மாதிரின்னு சொல்லட்டுமா என்றார்.
கண்ணாயிரத்துக்கு..பக் என்றாகிவிட்டது. என்ன.. தலைமுடி மல்லிகை பூ மாதிரி என்று சொன்ன… இப்ப என்னடான்னா..தார்சாலை மாதிரி இருக்கு என்கிற.. எப்படி மாத்தி மாத்தி விவரம் தெரியாமபேசுற அது தப்பு என்று கண்ணாயிரம் கோபமாக சொல்ல பூங்கொடி கோபத்தை அடக்கிக்கொண்டார்.
எதுங்க தப்பு..எலுமிச்சம் பழம் தேய்ச்சி அருவியில் குளிச்சதாலே கடினமாக இருந்த உங்க முடி ரொம்ப மென்மையாயிட்டு. அந்த மென்மையை குறிக்க..மல்லிகை பூமாதிரி உங்கமுடி இருக்கின்னு சொன்னேன்.. அது தவறா என்று கேட்க.. கண்ணாயிரத்துக்கு லேசாக புரிந்தது.
அவர்..ஏ..பூங்கொடி அப்படின்னா.. நீ என் முடி மென்மையாக இருக்கிறதை சொல்லுறதுக்குத்தான் மல்லிகை பூமாதிரி முடி இருக்கு என்று சொன்னியா.. என்று கேட்க.. பூங்கொடி ஆமா ..நீங்க என்ன நினைச்சிங்க என்று கேட்க.. கண்ணாயிரம். .சிரித்தபடி..அது பூங்கொடி..மல்லிகை பூ வெள்ளையா இருக்குமல்லவா..அதனால நீ..என்முடி வெள்ளையா இருக்கின்னு சொல்லுறீயோ என்று தப்பா புரிஞ்சிக் கிட்டு தகறாறு பண்ணிட்டேன். முடி மென்மையா மல்லிகை பூமாதிரி இருக்கு என்று நீ முதலிலே சொல்லி இருந்தால் பிரச்சினையே வந்திருக்காது இல்லையா.. என்று சொல்ல நீங்க இப்படி தப்பா நினைப்பீங்க என்று எனக்கு எப்படி தெரியும் என்று பூங்கொடி சொல்ல..கண்ணாயிரம் சிரித்தார்.
பூங்கொடி இனி..என் முடி மல்லிகை பூ மாதிரி இருக்கு என்று சொல்லு தார்சாலை மாதிரின்னும் கருகுன புல்லுமாதிரின்னும் செல்லாத சொல்லாதே .. அது ஒரு மாதிரி இருக்கு என்று கண்ணாயிரம் சொன்னார்.
என்ன முடி பிரச்சினை தீர்ந்திட்டா என்றபடி பயில்வான் அங்கு வர.. அவரைப் பார்த்த கண்ணாயிரம். வாங்க பயில்வான்.. நீங்களும் என் முடி மென்மையாக இருப்பதால் தான் பஞ்சா பறக்குன்னு சொன்னீங்களா என்று கேட்க… பயில்வானும் ஆமாப்பா.. ஆமா என்று தலையை அசைத்தார்.
கண்ணாயிரத்துக்கு..தனது கேள்விக்கு விடை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார்.
பயில்வானும் சிரித்தபடி..அகத்தியர் அருவி தண்ணிக்கு தனி மகிமை இருக்கு. முடியும் நல்லா மென்மையா கிடுது என்று சொல்ல கண்ணாயிரம்..ம்ஹும் ..எலுமிச்சம் பழம் தேய்ச்சதாலே முடி மென்மையாகிட்டு என்று வாதிட்டார்.
அதைக்கேட்ட சுடிதார் சுதா..அடே நல்லா இருக்குதே வாதம்.. ஆண்களின் கூந்தல் மென்மையாக இருப்பதற்கு காரணம் அருவி நீரா..எலுமிச்சம் பழச்சாறா..என்று பட்டிமன்றம் நடத்தலாம் போலிருக்கே என்று கேலி செய்தாள்.
கண்ணாயிரம் உடனே..கொஞ்சம் மாற்றம்…எனக்கு என்மனைவிதான் எலுமிச்சம் பழத்தை அரக்கி தேய்ச்சா.. என்முடி மென்மையாகிட்டு.. அதனால..ஆண்களின் கூந்தல் மென்மையாக காரணம்..அருவி குளியலா..அல்லது அருமை மனைவி அரக்கி தேய்த்த எலுமிச்சம் பழ குவியலா என்று வைக்கலாமே என்று கேட்டார்.
பூங்கொடி..தன் கணவர் தன் உழைப்பை மதித்து பட்டிமன்ற தலைப்பில் தன்னை சேர்த்தது பெருமையாக நினைத்தார்.
ஆனால் அந்த அரக்கி என்பதை மட்டும் அழுத்தி என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்த..அனைவரும். ..சிரித்தனர்.
(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.