June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை திகைக்க வைத்த டிக்கெட்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Ticket that stunned Kannayiram/ comedy story/ Tabasukumar

16.10.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு மலைத்தேன் பாட்டில் வாங்கிக்கொண்டு சுற்றுலா பஸ்சை நோக்கி வேகமாக வந்தபோது மழை கொட்டியது. அப்போது நிலை தடுமாறிய கண்ணாயிரம் தேன் பாட்டிலை தவறவிட அது உருண்டு ஓட கண்ணாயிரம் மழைத் தண்ணீரில் விழுந்து உருண்டு புரண்டு அந்த பாட்டிலை கைப்பற்றி பஸ்சுக்கு ஓட அவரது மனைவியோ.. உடம்பெல்லாம் சகதியா இருக்கு குளிச்சிட்டுவாங்க என்க.. கண்ணாயிரம் எங்கே போய் குளிப்பது என்று தடுமாறினார்.
அப்போது அருகில் உள்ள ஒரு பாறை மேலிருந்து மழைநீர் கொட்டுவதை பார்த்த கண்ணாயிரம் அந்த இடத்தை நோக்கி ஓடினார்.
பாறையின் கீழே அமர்ந்து..மழைநீரில் குளித்தவாறு ராக்கம்மா கையைத் தட்டு, புது ராகத்தில் மெட்டுக்கட்டு.. ஜகஜகஜகஜசக்..என்று பாடினார்.
மழை நீர் பெருகி ஒரு ஆறு போல ஓட.. கண்ணாயிரம் அதில் நீந்தி குளிக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர்.. கண்ணாயிரத்தை பார்த்து.. யாருங்க.. அங்கே குளிக்கிறது.. என்று அதட்ட கண்ணாயிரம் பயந்துபோய்.. நான்தாங்க கண்ணாயிரம்.. என்க.. ஒருவர்.. யோவ்.. எந்த கண்ணாயிரம் என்று கேட்க.. கண்ணாயிரம் பதிலுக்கு.. பாண்டிச்சேரி கண்ணாயிரம் என்று சொன்னார்.
உடனே அவர் ஓ.. வெளியூரா.. என்று கேட்டபடி சிரிக்க கண்ணாயிரம் ம்.. வெளியூர் இல்ல.. வெளி மாநிலம்.. தெரியுமா என்று நெஞ்சை நிமிர்த்தினார்.
உடனே அவர்.. அப்படியா.. வெளிமாநிலமா…. அதான் இப்படி.. சரி.. இப்படி நீந்தி குளிக்கிறீயே டிக்கெட் எடுத்தாச்சா என்று கேட்க.. கண்ணாயிரம் திடுக்கிட்டபடி.. என்ன.. பாறையிலிருந்து வரும் மழை நீரில் குளிக்க டிக்கெட் எடுக்கணுமா.. என்ன அநியாயம் இது.. என்று கோபித்தபடி எழுந்து நின்றார்.
அந்த டிக்கெட் யார் கொடுக்கா.. நான் பார்த்து கேட்டுட்டு வர்ரேன் என்று கண்ணாயிரம் சொல்ல.. அவரோ.. ஓய் குழப்பாதய்யா.. மழை தண்ணீன்னு நினைச்சி நீந்தி குளிக்காதீரும்.. நிறைய பள்ளம் இருக்கு.. பிறகு உங்களுக்கு டிக்கெட்டு கொடுத்திருவாங்க.. தெரியுதா என்றார்.
டிக்கெட் என்றதும் கண்ணாயிரத்துக்கு மீண்டும் கோபம் வந்தது. என்னய்யா. மறுபடி மறுபடி டிக்கெட் என்கிற… குற்றாலத்தில கூட குளிக்க டிக்கெட் கேட்கல.. அகத்தியர் அருவியிலே குளிக்க டிக்கெட் கேட்கல.. சாதாரண பாறை தண்ணியிலே குளிக்க டிக்கெட்டா..அதுவும் அவங்களே டிக்கெட் கொடுப்பாங்களாம்.. எப்படி.. டிக்கெட் கட்டணம் எவ்வளவு.. சீல் குத்தியிருக்குமா.. இருக்காதா.. வெறுமன வசூல் பண்ணுறீயளா.. சொல்லுங்க என்று கண்ணாயிரம் அதட்ட அவர்..யோவ் நான் ஒண்ணு சொன்னா..நீ ஒண்ணு சொல்லுற.. என்க கண்ணாயிரம்.. ஏங்க.. நீங்க டிக்கெட்டு அப்படின்னு சொன்னீங்க.. நானும் அதே டிக்கெட்டைத்தான் சொல்லுறன்.. நான் வேற ஒண்ணும் சொல்லலையே என்றார்.
அதைக்கேட்ட அவர்.. சரியா மாட்டிக்கிட்டேம் போலிருக்கே.. யோவ் ..நான் ஒரு டிக்கெட்டை சொன்னா.. நீ ஒரு டிக்கெட்டை சொல்லுறய்யா..உங்கிட்ட அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியலையே.. சரியான முட்டாள இருக்கிய என்றார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம் உஷ்ணமாகி எப்படி என்ன முட்டாள் என்று சொல்லலாம் என்று எகிற.. அவரோ.. ஏய் நான் சொல்லூறதை சொல்லிட்டேன்.. நீ கேட்டமாட்டேங்கிறே.. இதிலே நீந்தி குளிச்சா..கண்டிப்பா டிக்கெட் எடுத்திடுவ.. போ என்றபடி அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
அதைப்பார்த்த கண்ணாயிரம்..ம் நம்மளை ஏமாத்தப் பாக்கிறாரு.. டிக்கெட்டாம் டிக்கெட்டு.. யார் வாராருன்னு பார்ப்போம் என்று மீண்டும் நீந்தி குளிக்க தொடங்கினார்.
அந்த நேரத்தில் ஒரு முதியவர் வேகமாக வந்தார். யாருங்க.. அங்கே குளிக்கிறது.. மேல போயிடுவீங்க.. ஜாக்கிரதை என்று எச்சரிக்க கண்ணாயிரம் மெல்ல .. என்னடா இது.. ஒருத்தன் குளிச்சா டிக்கெட் எடுத்தாச்சா என்று கேட்கிறான். இன்னொருவன் வந்து மேலே போயிடுவேங்கிறான்..என்ன விமானத்திலேயா கூட்டிட்டு போவாங்க.. என்று நினைத்தார்.
உடனே..ஏங்க.. டிக்கெட் எடுக்காமலேயே மேலே கூட்டிட்டு போவாங்களா என்று கேட்க.. முதியவர் ஆமா. இப்படி குளிச்சா டிக்கெட் எடுக்காமலேயே மேலே கூட்டிட்டு போயிடுவாங்க. என்றார்.
கண்ணாயிரத்துக்கு சந்தோஷம்.. இந்த ஆற்றிலே குளிச்சா அவ்வளவு சலுகையா..டிக்கெட் எடுக்காமலே மேலே கூட்டிட்டு போயிடுவீங்களா.. கொஞ்சம் பொறுங்க.. என் மனைவியையும் கூட்டிட்டு வந்திடுறன். நான் எங்கே போனாலும் தனியா போகமாட்டேன்.. என் மனைவி குளிச்சாலும் மேலே போலாமா என்று கண்ணாயிரம் அப்பாவியாக கேட்டார்.
அதற்கு முதியவர் ஆமா யார் குளிச்சாலும் போகலாம்.. என்று சொல்ல.. கண்ணாயிரம் மகிழ்ச்சி அடைந்தார்.
டிக்கெட் இல்லாம மேலே கூட்டிட்டு போறாங்க.. இது சாதாரணமான விசியமா.. மனைவி பூங்கொடியையும் கூப்பிட்டு செல்ல வேண்டியதுதான். ஆனா போனா சீக்கிரம் வரணுமே.. சுற்றுலா பஸ்சிலே விட்டுவிட்டு போய்விடுவாங்களே.. என்ன செய்யலாம் என்று கண்ணாயிரம் நினைத்தார்.
உடனே முதியவரிடம்.. ஏங்க.. மேலே போறதில ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஆனா உடனே கீழே வந்து இறக்கிவிட்டு விடுவீங்களா என்று கேட்க.. முதியவர்….ம்.. அதெல்லாம் முடியாது. மேலே போனா போனதுதான் என்க..
கண்ணாயிரம் மெல்ல ஏன் என்று கேட்க.. முதியவர் கோபத்தில் என்ன விமானமா.. ஏத்திட்டு மேல போயிட்டு கீழே இறக்கிவிட என்றார்.
கண்ணாயிரம் ஒன்றும் புரியாமல் விமானம் இல்லைன்னா எதிலே மேலே கூட்டிட்டு போவாங்க.. என்று கேட்க..
முதியவர்..அதுவா காற்றிலே என்று சொல்ல கண்ணாயிரம் உஷாராகி என்ன காற்றிலேயா..கிண்டல் பண்ணுறீயளா என்று எகிற.. முதியவர்.. இல்லப்பா.. உண்மையைத்தான் சொல்லுறேன் என்றார்.
என்ன உண்மை என்று கண்ணாயிரம் அதட்டலாக கேட்க முதியவர் ஆவேசமாக.. அட பாவி..பள்ளம் அதிகமாக கிடக்கிற இந்த ஆத்திலே குளிச்சா..தண்ணியிலே மூழ்கி செத்து டிக்கெட் எடுக்காமலே மேல் உலகம் போயிடுவே..போன வருஷம்.. இதே இடத்திலே குளிச்சி மூணு பேரு செத்து போயிட்டாங்க.. புரியுதா என்றார்.
கண்ணாயிரத்துக்கு குப்பென்று வியர்த்தது. இதுதான் டிக்கெட் இல்லாமல் மேலே போறதா..அடி ஆத்தி.. இதை முன்னமே விளக்கி சொல்லியிருக்கலாமே என்றபடி ஆற்றிலிருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *