மாசமா..கர்ப்பமா.. குழம்பியகண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readMonth..Pregnant? Kannayiram confusion / Comedy Story / Tabasukumar
24.5.2024
கண்ணாயிரம் பஸ்விபத்தில் பழைய நினைவுகளை மறந்தார்.தனது மாமா அருவாஅமாவாசையையும் அவர் மறந்துவிட்டார். அவரை இளைமையாக வரும்படி அருவாஅமாவாசையிடம் அவரது மகள் பூங்கொடி சொல்லியதால் அருவாஅமாவாசை பேண்ட் சட்டை போட்டு கறுப்பு கண்ணாடி அணிந்து தலைக்கு கறுப்பு டை அடித்தார்.
மகள் முழுகாம இருப்பதாக நினைத்து வாழைத்தாருடன் ஆட்டோவில் வந்து இறங்கினார். அவரைப் பார்த்த கண்ணாயிரம்.. யாரு நீங்க எங்கோ பார்த்த மாதிரி இருக்கு என்று கேட்க.. அருவாஅமைசையோ ஐஎம் அமாவாசை என்றார்.
கண்ணாயிரம் அவரை சந்தேகத்துடன் பார்த்தார். ஒருப்பக்கம் பார்த்தா எனக்கு பொண்ணு தராம மிரட்டிய எங்க மாமா மாதிரி இருக்கு.. ஆனா குரல் வேற மாதிரி இருக்கே என்று கேட்க.. அருவாஅமாவாசை.. அதுவா ஜலதோஷம் அதான் குரல் வேற மாதிரி இருக்கு என்று சமாளித்தார்.
அப்படியா என்று கேட்ட கண்ணாயிரம்.. ஆமா இந்த வாழைத்தாரெல்லாம் ஏன் வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்டார்.
உடனே அருவாஅமாவாசை.. ஏங்க அதோ நிற்கிறாளே என் மகள் அவள் மாசமா இருக்கா என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் ஆமா.. ஒரு மாசமாக இருக்காங்க என்று சொன்னார்.
அதைக்கேட்ட அருவாஅமாவாசை.. ஏங்க..ஒருமாசமா இருக்கா.. என்று சொல்லுங்க.. இருக்காங்க என்று ஏன் மரியாதை கொடுத்து பேசுறீங்க மாசமா இருப்பதால மரியாதை கொடுக்கீங்களா என்றார்.
உடனே கண்ணாயிரம்..அதுவா ஒரு மாசமாக இருக்காங்க..எனக்கு உதவி செய்யுறாங்க..அதனால மரியாதை கொடுக்கிறேன் என்று சொன்னார்.
அருவாஅமாவாசை சிரித்தார்.
அப்போது கண்ணாயிரம் கொஞ்சம் யோசித்தபடி ஏங்க உங்க பொண்ணு ஒருமாசமா இருந்ததால ஒரு வாழைத்தார் வாங்கிட்டு வந்திருக்கீங்க.. இரண்டுமாசமா இருந்தா இரண்டு வாழைத்தார் வாங்கிட்டு வந்திடுவியளா என்று கேட்டார்.
அருவாஅமாவையும்.. ஓ.. இரண்டு வாழைத்தார் வாங்கி வந்திருப்பேன் என்று சொல்ல கண்ணாயிரம் சிரித்தார்.
பின்னர் 12 மாசம் இருந்தா 12 வாழைத்தார் வாங்கிட்டு வந்திருப்பியளா..என்று அப்பாவியாகக் கேட்க.. அருவாஅமாவாசை அதிர்ச்சி அடைந்தார்.
என்ன சொல்லுற..பத்தாவது மாதமே குழந்தை பிறந்திடுமே.. பிறகு எதுக்கு பன்னிரெண்டாம் மாதம் என்று அருவாஅமாவாசை கேட்க.. கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார்.
என்ன குழந்தையா..யாருக்கு என்று கேட்டபடி அருவாஅமாவாசையைப் பார்த்தார்.
குழந்தை என் மகளுக்குத்தான் என்று அருவாஅமாவாசை சொல்ல கண்ணாயிரம் திடுக்கிட்டபடி.. அவங்களுக்கா.. அவங்க புருஷன் இரண்டுவருஷமா துபாயில் இருக்காங்க என்று சொன்னாங்க.. பிறகு எப்படி அவங்களுக்கு குழந்தை என்று கேட்டார்.
அருவாஅமாவாசை..டேய்.. அவா மாசமாக இருப்பதற்கு நீதாண்டா காரணம் என்க கண்ணாயிரம்.. ஆமா.. உனக்கு உடம்பு சரியில்லாததால் எங்க அம்மா இவங்களை உதவிக்கு விட்டுவிட்டு வெளியூர் போயிட்டாங்க.. அவங்க வந்தவுடன் இவங்க அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க என்றார்.
இவன் என்ன சொல்லுறான்..நான் ஒண்ணு சொன்னா..அவன் ஒண்ணு சொல்லுறான். அவா மாசமா இருக்கான்னு சொல்லுறேன்.. இவன் அவா ஒருமாசமா இருக்கா என்கிறான்.. ஏதோ குழப்புறானே என்றார்.
பின்னர்..நேரடியா கேட்டுவிட வேண்டியதுதான்..இவா கர்ப்பமாக இருப்பதற்கு நீதாண்டா காரணம் என்று அருவாஅமாவாசை சத்தமாகச் சொன்னார்.
அதைக்கைட்ட கண்ணாயிரம்.. ஏங்க. இவங்க ஒருமாசமா இங்கே இருக்க நான்தான் காரணம். ஆனால் இவங்க கர்ப்பமாக இருக்க நான் காரணம் இல்லை என்று கண்ணாயிரமும் சத்தமாகச் சொன்னார்.
உடனே அருவாஅமாவாசை கோபமாகி..டேய்..பொய் சொல்லாதேடா..என்று மிரட்டினார்.
கண்ணாயிரமோ..இந்த மிரட்டல் எல்லாம் இங்கே பண்ணாதீங்க.. என் சுண்டுவிரல்கூட அவங்க மேலே பட்டதில்லை. நான் ரொம்ப யோக்கியமானவன் தெரியுமா என்க… அருவாஅமாவாசை உஷ்ணமாகி.. டேய் என் கோபத்தை கிளப்பாதே என்க. பூங்கொடி.. அப்பா..அமைதியாக இருங்க என்று சொல்ல.. அருவாஅமாவாசை.. நீ சும்மா இரும்மா..என்றார்.
பூங்கொடி..நான் சும்மாதான் இருக்கன் அப்பா என்று சொல்ல, அருவாஅமாசை ..நீ என்ன செய்வ..அவனை எதிர்த்து பேசுவியா
.சுமாமாதான் இருப்பே. நான் அவனை விடமாட்டேன்.. நீ கர்ப்பமாக இருக்கே.. ஆனா இந்தப் பய உன் மேல விரல்கூட படலைங்கிறான்.. என்று சொல்ல, பூங்கொடியோ.. அப்பா நான் இப்போ சும்மாதான் இருக்கேன் என்று சொல்ல அதை சரியாக புரிந்து கொள்ளாத அருவாஅமாவாசை.. சரிம்மா.. நீ சும்மா இரு நான் பாத்துக்கிறேன் என்றபடி கண்ணாயிரத்திடம் உண்மையைச் சொல்லுடா என்று மிரட்டினார்.
கண்ணாயிரம் ஏங்க.. என் சொத்தை ஆட்டையப்போட.. அப்பாவும் மகளும் நாடகம் ஆடுறீங்களா என்று கேட்க.. அருவாஅமாவாசை மேலும் சூடானார். டேய்..நீ பாக்கிறது சாதாரண முகம்.எனக்கு இன்னோரு முகம் இருக்கு தெரியுமா என்று கேட்க..கண்ணாயிரம் தெரியாது என்றார்.
உடனே அருவாஅமாவாசை.. டேய் என்னை நன்றாக உற்றுப்பார் என்று கோபம் கொப்பளிக்க முகத்தைக்காட்டினார்.
அதைப்பார்த்த கண்ணாயிரம்.. ஏங்க நீங்க சாதாரண முகத்தைக் காட்டினாலும் சரி கோப முகத்தைக்காட்டினாலும் சரி..இவங்க கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என்றார்.
அதைக் கேட்ட அருவாஅமாவாசை..டேய்..எங்கிருந்தோ வந்தாள் படத்தில் முதலில் சிவாஜிகணேசன் ஒத்துக்கொள்ள மாட்டார். பின்னர் உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்வார்.. அப்படி ஏற்றுக்கொள்ளுடா என்று சொன்னார்.
அதற்கு கண்ணாயிரம் அந்த படத்துல சிவாஜி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போ தவறு நடந்துருச்சி… ஆனால் நான் நல்ல மயிண்டோடத்தானே இருக்கேன்.. என்று கண்ணாயிரம் சொன்னார். மேலும் நான் அதற்கு காரணம் இல்லை என்றார்.
உடனே அருவாஅமாவாசை..உன் மேல் சத்தியமா உன் தலையில் அடித்துச் சொல்லு என்றார்.
கண்ணாயிரம் கோபமாகி..அருவாஅமாவாசை தலையில் தனது வலதுகையால் அடித்து சத்தியம் செய்து.. நான் அவங்க கர்ப்பத்துக்கு காரணம் இல்ல என்றபடி தன் கையைப்பார்த்தார்.
கறுப்பாக அப்பியிருந்தது. அதைப்பார்த்த கண்ணாயிரம்..என்ன கறுப்பு ..தலைக்கு.. டை அடிச்சியளா..என்னை ஏமாற்றப்பாக்கிறீயளா ..விடமாட்டேன் என்று சவால்விட்டார்.
அதைக் கேட்ட அருவாஅமாவாசை தன் வேஷம் கலைந்ததால்..டேய்..நான் சாதாரண அமாவாசை இல்லை..அருவாஅமாவாசை என்றபடி கண்ணாயிரம் மீது பாய அங்கு ஐயோ..அம்மா என்ற சத்தம் எதிரொலித்தது.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.