The cat that jumped on Kannayiram in the dark/comedy story/Tapasukumar/comedy story/Tapasukumar
17.8.2025 கண்ணாயிரம் தாம்பரத்திலிருந்து புதுவைக்கு போலீஸ் வேனில் மனைவியுடன் வந்தார். அப்போது அரிவாளுடன் யாரும் வீட்டின் அருகே நின்றால் எனக்கு தகவல் தெரிவியுங்கள் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு சென்றார். இந்த நிலையில் மின்சாரம் தடைபட்டதால் மெழுவர்த்தி ஏற்றிவைக்கப்பட்டிருந்தது. காற்றுவரவில்லை என்று கண்ணாயிரம் ஜன்னலை திறக்க மூன்று குண்டர்கள் கண்ணாயிரம் வீட்டை சுட்டிக்காட்டி பேசிக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார். தீவிரவாதியை காட்டிக் கொடுத்ததால்தான் அவரது ஆதரவு குண்டர்கள் நம்மை தாக்க வீட்டு முன்னால் நிற்கிறார்கள் என்று பயந்து வேகமாக ஜன்னலை பூட்டினார். பூங்கொடியிடம் ஜன்னலை திறக்காதே.. குண்டர்கள் நிக்கிறாங்க.. என்னை தாக்கத்தான் வந்திருக்காங்க.. இருட்டாக இருப்பதால் எந்த வீடு கண்ணாயிரம் வீடு என்று தெரியாமல் முழிச்சிக்கிட்டு நிக்கானுவ.. அப்படியே நிக்கட்டும். காலையிலே இன்ஸ்பெக்டரூக்கிட்ட சொல்வோம் என்றார். பூங்கொடி உடனே, இப்பவே போலீசுக்கு போன் பண்ணுங்க என்க, கண்ணாயிரம் செல்போனை எடுத்தார். போன்ஜார்ஜ் இல்லாமல் இருந்தது. கரண்டு வேற இல்லாம இருக்கு.. என்ன பண்ணுறது.. என்று விழித்தார். பூங்கொடி தன் செல்போனை பார்த்தார். குறைந்த அளவே ஜார்ஜ் இருந்தது. அதைப் பார்த்த கண்ணாயிரம்..ஏய் பூங்கொடி..உன் போனில் குறைவாகத்தான் ஜார்ஜ் இருக்கு.. இதைவச்சி போலீசுக்கிட்ட பேச வேண்டாம் இருக்கிற ஜார்சும் போயிடும். காலையிலே பாத்துக்கலாம் என்றார். பூங்கொடியும் சரி என்க,கண்ணாயிரம், அட.. கரண்டுவராது போலிருக்கு..கதவை நல்லா பூட்டு.. எவனும் வந்திடப் போறான் என்று அதட்டினார். பூங்கொடியும் ஓடிப்போய் கதவை பூட்டினார். அதைப் பார்த்த கண்ணாயிரம், என்னடா கொடுமை இது. ஒரே புழுக்கமாக இருக்கு.. வெளியிலே போய் கொஞ்சம் காற்று வாங்கலாமுன்னா குண்டர்கள் நடமாடுறானுவ.. என்ன செய்யுறது.. பூங்கொடி அந்த விசிறியை எடுத்துட்டுவா என்று கத்தினார். பூங்கொடி விசிறியை எடுத்துக்கொண்டு கொடுத்தார். ஏங்க மெழுகுவர்த்தி எரியுது அது பக்கத்திலே போய் வீசிடாதீங்க என்க, கண்ணாயிரம் ஏய் அதெல்லாம் பாத்துக்கிறேன்.. கொடு விசிறியை என்று வாங்கி வேகமாக வீசினார். என்ன எவ்வளவு வீசினாலும் காத்து வரல என்றபடி கண்ணாயிரம் விசிறியை அதிக வேகமாக வீச, அது அவரது கையிலிருந்து நழுவி மெழுகுவர்த்தி மேல்விழ, அதில் எரிந்துகொண்டிருந்த தீ அணைந்தது. அட.. என்னாச்சு ஒரே இருட்டாயிட்டு.. மெழுகுவர்த்தி அணைஞ்சி போச்சா.. என்று பூங்கொடியிடம் கேட்க, அவர் கோபத்தில், அதான் சொன்னேன்.. மெழுகுவர்த்தியை அணைச்சிடாதீங்கன்னு.. இப்போ அணைச்சிட்டிங்களா இனி ஒண்ணும் செய்ய முடியாது என்க, கண்ணாயிரம், ஏய்..கொஞ்சம் தீப்பெட்டி எடுத்துட்டுவா என்க, அவரோ, இந்த இருட்டுக்குள்ளே தீப்பெட்டியை எங்கேபோய் தேடுவது என்று கத்த, கண்ணாயிரம், ஏய் பூங்கொடி. .நானே தீப்பெட்டியை தேடி கண்டுபிடிக்கிறேன் என்றவாறு அங்கிருந்து எழுந்தார். ஆ.. ஆ.. ஆயிரம் நிலவே வா... ஓராயிரம் நிலவே வா என்று பாட்டுபாடியவாறு அங்கும் இங்கும் இருட்டில் நடந்தார். தீப்பெட்டியை எடுக்கச் சென்றவர் அது இருக்கும் இடம் தெரியாமல் சமையல் அறைக்குள் புகுந்து பாத்திரங்களை உருட்ட, அவை கீழேவிழுந்து டொயிங் என்று சத்தம் எழுப்ப, பூங்கொடி, ஏங்க...பாத்திரத்தை உருட்டாதீங்க.. இங்கே வாங்க. என்க, கண்ணாயிரம், ஏய்..இருட்டிலே நான் எங்கே நிக்கிறேன்னு கூட தெரியல.. என்க, பூங்கொடி ஏங்க உங்களூக்கு வேண்டாத வேலை.. நீங்க இப்ப கிச்சனிலே நிக்கிங்க. அப்படியே திரும்பி நேராக பத்து ஸ்டெப் எடுத்துவையிங்க.. என்பக்கத்திலே வந்திடலாம் என்று சொல்ல, கண்ணாயிரம், என்னடா வம்பாப் போச்சு.. என்றவாறு திரும்பி ஒண்ணு, இரண்டு என்று காலடி எடுத்துவைத்து நடந்தார். அப்போது திடீரென்று மியாவ் என்று பூனை அவர் மீது பாய, கண்ணாயிரம் அலறி அடித்துக்கொண்டு பூங்கொடியைத் தேடி ஓடினார்.(தொடரும்) -வே.தபசுக்குமார்.புதுவை.