கண்ணாயிரம் வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ்பாதுகாப்பு/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Kannayiram’s house is guarded by a gun/comedy story/Tapasukumar
12.8.2025
கண்ணாயிரம் இரவில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்திருந்தார். ஜன்னலை திறந்து வெளியே பார்த்தபோது இரண்டு குண்டர்கள் பஸ்நிறுத்ததில் படுத்திருப்பதைப் பார்த்தார். அவர்கள் தன்னைக் கொல்ல தீவிரவாதிகள் அனுப்பிய ஆளாக இருக்கும் என்று நினைத்து ஜன்னல் கதவை பூட்டினார். இரவுமுழுவதும் மின்சாரம்வரவில்லை.
காலையில் மின்சாரம் வந்தது.குண்டர்கள் இருக்கிறார்களா என்று ஜன்னலைத் திறந்துபார்த்தார். இரண்டு குண்டர்கள் எழுந்து உட்கார்ந்திருந்தனர். அருகில் மற்றொருவர் கத்தியை கூர் பார்த்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த கண்ணாயிரம் திடுக்கிட்டார். அது சாதாரண கத்தி அல்ல. ஒரே வெட்டில் தலை துண்டாகிவிடும். அவ்வளவு பெரிய கத்தி.
ஏய்.. இரண்டு குண்டர்களும் காலையில் புதிதாக குண்டனை கத்தியோடு வரவச்சிருக்காங்க என்று மனைவி பூங்கொடியிடம் கூறினார். அவரும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். ஆமாங்க..மூணுபேர் நிக்காங்க..ஒருத்தன் கத்தி வச்சிருக்கான். .உடனே இன்ஸ்பெக்டருக்கு போன் போடுங்க.. என்று கத்த கண்ணாயிரம், ஆமா..பூங்கொடி இன்ஸ்பெக்டர் சொன்னாரு.. அரிவாளோடு வீட்டு முன்னாலே எவன் நின்னாலும் போன் பண்ணு என்று சொன்னாரு.. ஆனா இங்கே ஒருத்தன் கத்தியோடு அல்லவா நிக்கிறான்.. நான் என்ன பண்ணுவன் என்று கண்ணை கசக்கினார்.
உடனே பூங்கொடி..ஏங்க.. இன்ஸ்பெக்டர் ஒரு பேச்சுக்கு அருவான்னு சொல்லி இருப்பாரு.. கத்தின்னா சும்மாவா.. குத்துனா உயிர் போயிடும்.. உடனே போன் பண்ணுங்க என்று சொல்ல, கண்ணாயிரம் நம்பரைத் தேடி அவசரமாக ஒரு நம்பரை அழுத்தினார். அது வேறு ஒருவருக்கு போனது.. ரிங் வந்தவுடன் கண்ணாயிரம் ஹலோ என்க, எதிர்முனையில் பேசியவர்.. யார்ரா.. இது விடிய விடிய போன் பண்ணி கழுத்தை அறுத்தது. இப்பம் விடிஞ்சபிறகும் போன் பண்ணி கழுத்தை அறுக்கிறது.. இது ஈ.பி ஆபீஸ் இல்ல.. ஈஸ்வரன் வீடு.. கரண்டு எப்போ வரும் எப்போவரும் என்று கேட்கவேண்டியது. ஈ.பி. ஆபீசுக்கு போகவேண்டிய நம்பர் எல்லாம் ஈஸ்வரன் வீட்டுக்கு வருது. சீக்கிரம் போன் நம்பரை மாத்தணும். கழுத்தை அறுக்காதய்யா போனை கட்பண்ணு என்று கத்த கண்ணாயிரம் பயந்துபோய் போன் இணைப்பை துண்டித்தார்.
என்ன இன்ஸ்பெக்டருக்குப் போட்டா ஈஸ்வரன் வீட்டுக்குப் போகுது..அவன் வேற கழுத்தை அறுக்காதே என்று கத்துறான்.. நான் இங்கே இருக்கேன். அவன் கழுத்தை எப்படி அறுக்கமுடியும்.. எங்கே போனாலும் நமக்கு சிக்கலாகத்தான் வருது.. என்று முனங்க, பூங்கொடி அவரிடம், ஏங்க..நம்பரை மாற்றிப்போட்டுவிட்டீங்களா.. இங்கே கொடுங்க.. நான் இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணித் தர்ரேன் பேசுங்க என்று பூங்கொடி இன்ஸ்பெக்டர் நம்பருக்கு போன் பண்ணி கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.
பேசுங்க..பேசுங்க என்று பூங்கொடி சொல்ல, கண்ணாயிரம் ஹலோ என்க, இன்ஸ்பெக்டரும் ஹலோ என்க.. மாற்றி மாற்றி இருவரும் சொல்ல, பூங்கொடியோ.. ஏங்க..கண்ணாயிரம் பேசுறன்னு சொல்லி பேசுங்க.. என்க, கண்ணாயிரம் உடனே பதட்டத்துடன் நான் கண்ணாயிரம் பேசுறன் என்க, இன்ஸ்பெக்டர், சொல்லுங்க என்க, கண்ணாயிரம் பதில் சொல்லாம அழ, இன்ஸ்பெக்டர் ம் அழாதீங்க சொல்லுங்க என்க, அவர்.. அய்யா என்னைக்கொல்ல மூணு பேர் கையில் கத்தியுடன் வீட்டுமுன்னால விடிய விடிய நிக்கானுவ.. அருவாவுடே நிக்கலையே.. கத்தியுடன்தானே நிக்கானுவ என்று வராம விட்டுறப்போறீங்க.. துப்பாக்கியோட வாங்க..சீக்கிரம் என்று கத்தினார்.
உடனே இன்ஸ்பெக்டர்… ஐந்து நிமிடத்திலே அங்கே வர்ரேன்..பயப்படாம இருங்க என்க, கண்ணாயிரம் சரி என்று போன் இணைப்பை துண்டித்தார்.
பூங்கொடி இன்ஸ்பெக்டர் சீக்கிரம் வருவதாகச் சொல்லிட்டாரு..கண்ணாயிரமா கொக்கா.. போலீஸ்வந்து குண்டர்கள் மூணுபேரையும் பிடிச்சிட்டுப் போயிடுவாங்க என்று சிரித்தார்.
ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்தார். அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆ.. நில்லுங்க.. நில்லுங்க.. என்று சொல்லிய கண்ணாயிரம் இன்ஸ்பெக்டர் வருகிறாரா என்று எட்டிப்பார்த்தார்.
ஜீப் வந்துகொண்டிருந்தது. ஆ.. வந்துட்டார்.. ஆ..வந்துட்டார்.. என்று கண்ணாயிரம் வேகமாகப் போயி கதவை திறந்தார்.
இன்ஸ்பெக்டர் ஜீப்பில் இருந்து போலீஸ்காரர்களுடன் வந்து இறங்கினார். அவரைப்பார்த்ததும் கண்ணாயிரம் அருகே ஓடினார். எங்கே அவங்க.. எங்கே அவங்க என்று இன்ஸ்பெக்டர் கேட்க, கண்ணாயிரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை கைகாட்டினார்.
போலீசார் அந்த மூன்று பேரையும் சுத்திவளைச்சாங்க.. யார்ரா நீங்க. கண்ணாயிரத்தை கொல்ல வந்தீங்களா என்று இன்ஸ்பெக்டர் அவர்கள் முதுகில் நான்கு அடி கொடுக்க, அவர்கள் அய்யோ அம்மா என்று அலறினார்கள்.
அய்யா நாங்க அப்பாவிங்கய்யா.. கண்ணாயிரத்தை கொல்லவரல என்றனர்.
அப்படி என்றால் இரவு முழுவதும் கண்ணாயிரம் வீட்டையே எட்டி எட்டிப்பாத்தீங்க என்று இன்ஸ்பெக்டர் கேட்க, அய்யா நாங்க இரண்டுபேரும் வெளியூர்காரங்க.. நாங்க ஊருக்குப் போறதுக்கு நடந்துவந்தபோது கரண்ட் போயிட்டு.. எங்களுக்கு இருட்டுன்னா பயம். எதுத்த வீட்டிலே பேச்சு சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அதனால பயம் இல்லாமல் இருக்கலாமுன்னு இந்த பஸ்நிறுத்தத்திலே படுத்து தூங்கினோம்.. கரண்டு வந்தபிறகு போலாமுன்னு நினைச்சோம். கரண்டுவரல..அதனால விடிய விடிய இங்கே இருந்தோம் என்றனர்.
உடனே இன்ஸ்பெக்டர், எதுக்கு கத்தியை காட்டி கண்ணாயிரத்தை மிரட்டினீங்க என்று கேட்க, குண்டர்களில் ஒருவன், அய்யா..அய்யா நாங்க மிரட்டலைய்யா.. நாங்க இரண்டுபேரும் ஆடு அறுக்கிறவங்க.. என்னுடைய கத்தி கொஞ்சம் மழுங்கிப் போச்சு.. காலையிலே இந்தவழியாக சாணைபிடிக்கிறவரு வந்தார். அவருக்கிட்ட நான் கத்தியை சாணைப்பிடிக்க கொடுத்தேன்.. அவர் சாணைபிடிச்சிட்டு கத்தி முனையில் கூர்பார்த்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்துதான் அவர் கத்தியைக் காட்டி மிரட்டுவதாக சொல்லியிருக்காரு.. சத்தியமாக நாங்க அவரை மிரட்டல என்க, இன்ஸ்பெக்டர்..அப்பாட.காலையிலே பஞ்சாயத்தா..போங்க..போங்க..நேரங்காலத்தோடு ஊருக்குப் போங்க..என்று குண்டர்களையும் சாணை பிடிக்கிறவரையும் அடித்துவிரட்டினார்.
அவர்கள் ஆளைவிட்டால் போதூம் என்று ஓடினார்கள். கண்ணாயிரம் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தார். அந்த நேரத்தில், கண்ணாயிரம் பயப்படாதீங்க.. உங்க வீட்டுமுன் துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு போடப்படும் என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி சென்றார்.
சிறிது நேரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் கண்ணாயிரம் வீட்டுமுன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டார். கண்ணாயிரம் பயத்துடன் அவரைப் பார்த்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.